அதிமுக - பாஜக கூட்டணியில் ஒருத்தரை விட்டால் ஒருத்தருக்கு வழி கிடையாது என்கிற நிலைதான் உள்ளது. அதிமுகவை விட்டுவிட்டு பாஜக நடுரோட்டிலா நிற்கும்? அதிமுகவிற்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனவே, அதிமுகவும் பாஜகவை விட்டு ஓட முடியாது. பாஜக ஓடவும் விட மாட்டார்கள்" என காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ராகுல்காந்தி நுழைந்தது, பாஜகவை ஆட்டம் காணச் செய்துள்ளது. அதானி எப்படி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்? என்றும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, எல்ஐசி போன்ற நிறுவனங்களில் இருந்து எவ்வளவு கடன் தரப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பிரதமர் மோடியால் பதில் சொல்ல முடியவில்லை. ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதால், தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்த விடாமல் தடுத்தனர்.
நாடாளுமன்றத்தை ஆளுங்கட்சியான பாஜக எம்பிக்கள், அமைச்சர்களே எழுந்து கோஷமிட்டு முடக்கியது, நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறை. ஜாயிண்ட் பார்லிமென்டரி கமிட்டி அமைப்பதற்கு மத்திய அரசு பயப்படுகிறது. இந்த கமிட்டி மூலம் எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் கடன் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் முழுமையாக தரப்படுவதால், இதை அமைக்க மத்திய அரசு பயப்படுகிறது. ராகுல் காந்தி மீது மத்திய அரசு பல்வேறு காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. எனவே காங்கிரஸ் கட்சி அதை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள இருக்கிறது. பாராளுமன்றத்தில் பலமுறை போராட்டம் நடத்தப்பட்டது. தெருக்களில் இறங்கி போராடி வருகிறோம். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர் போராட்டங்களுக்கு பிறகு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மூன்று மாதங்களுக்கு பிறகு தான் அடுத்த கூட்டத்தொடர் தொடங்கும். தமிழக ஆளுநர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்திற்கும் கையெழுத்திடாமல் உள்ளார். எனவே தமிழ்நாடு முழுவதும் அணி திரண்டு வந்து ஆளுநரை கண்டித்து 12ம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெறுகிறது.
ராகுல்காந்தி மீதான நடவடிக்கையை கண்டித்து வரும் 15ம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். திருச்சியில் எனது தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்படும். வரும் 20ம் தேதி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தொடர்ந்து நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். மாநிலங்களுக்கு வருகை தரும் பிரதமரை முதல்வர் புறக்கணிப்பது புத்திசாலித்தனம் இல்லை.
அதற்கு பதிலாக அந்த விழாவில் பங்கேற்று மாநிலங்களுக்கு தேவையான நலத்திட்டங்களை பெற்றுக் கொள்வது தான் புத்திசாலித்தனம். தெலுங்கானா முதல்வர் பிரதமர் விழாவை புறக்கணித்தது அவருடைய விருப்பம். திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் ஒருத்தரை விட்டால் ஒருத்தருக்கு வழி கிடையாது என்கிற நிலைதான் உள்ளது. அதிமுகவை விட்டுவிட்டு பாஜக நடுரோட்டிலா நிற்கும்? அதிமுகவிற்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனவே, அதிமுகவும் பாஜகவை விட்டு ஓட முடியாது. பாஜக ஓடவும் விட மாட்டார்கள்" என்றார்.
மேலும், "ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது, அப்போது அருகில் இருந்தவர்களை வைத்துக் கொண்டு மாநிலத் தலைவர் அழகிரி போராட்டம் நடத்தினார். அதற்கு காங்கிரஸில் நான்கு பேர் தான் இருக்கிறார்களா? என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருப்பது ரசனை கெட்ட விமர்சனம். காங்கிரஸில் நான்கு பேர் மட்டுமல்ல, 4 லட்சம் பேரை கூட கூட்ட முடியும். ஐபிஎஸ் படித்தவர்; மாநிலத் தலைவர் பதவி வகிப்பவர் இதுபோன்ற விமர்சனங்களை வைப்பது தவறானது” என்றார்.