சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு தன்னார்வலர்களைப் பாராட்டிய ஆளுநர் ஆர்.என். ரவி, "தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால் அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு.
முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாதான் தலைமையாக இருக்கப் போகிறது" என்று தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் இந்தக் கருத்து பல்வேறு கட்சித் தலைவர்களிடமும் பலத்த கண்டனங்களைப் பெற்றது. தொடர்ந்து பொங்கல் திருநாளுக்காகத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆளுநர் அனுப்பிய தேநீர் விருந்து அழைப்பிதழில் தமிழக அரசு இலச்சினை இல்லாமல் இந்திய அரசின் இலச்சினை இருந்தது. அதுமட்டுமின்றி அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுவும் தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பினை சம்பாதித்தது.
இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து வந்துள்ள பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு ஆளுநர் அனுப்பியுள்ள கடிதத்தில், "பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையைப் பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுக்கால கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை 'ஜல்லிக்கட்டு' விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடைத் திருநாளில் எங்கிருந்தாலும் எல்லா கிராமங்களிலும் சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களைக் கைகூப்பி வணங்கி பொங்கலோ பொங்கல் மரியாதை செலுத்துவோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.