சிதம்பரத்தில் நாளை(ஏப்.6) சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனையும், மயிலாடுதுறை நாடளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதா ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்காக பிரச்சார மேடை அமைக்கப்பட்டு வரும் இடத்தை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினர். இவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். கூறியதாவது... சிதம்பரம் தொகுதி வேட்பாளர் தொல்.திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து வருகிற 6 ம் தேதி சிதம்பரத்தில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார். திமுக அரசின் சாதனைகள் மக்கள் மத்தியில் சென்றுள்ளதால் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். முதல்வர் அறிமுகப்படுத்தும் வேட்பாளர்கள் எல்லாம் கொள்கை கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள். ஆட்சியில் இல்லாத போது இருந்த கூட்டணி தற்போது ஆட்சியில் இருக்கும்போதும் நீடிக்கிறது. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுவார் என்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், “தமிழக முதல்வர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அகில இந்திய அளவில் தேர்தல் வியூகம் அமைத்து பாஜக அரசை தூக்கி எறிய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கடுமையாக பணியாற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சி பூஜ்ஜியம் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட இந்த தேர்தலில் அது ஒரு பொருட்டு இல்லை. தேசிய அளவிலே அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி என்ற ஒரு அணியை உருவாக்கி, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் ஆட்சியை தூக்கி எறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்திகளை வகுத்து செயலாற்றி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இந்த தேர்தல் பாரதிய ஜனதாவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றும் தேர்தலாக அமையும், திமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது” என்றார்.