இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தற்போது விவாதப் பொருள் ஆகியுள்ளது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போன்ற தலைவர்கள் ஈழத்துப் பிரச்சனையில் அரசியல் செய்ததாக திருமா கூறுவது வருத்தமளிக்கிறது என மதிமுக துணைப் பொதுச் செயலாளர் தி.மு. ராசேந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து மதிமுக தி.மு.ராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் தொலைக்காட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கின்றது. இந்த நேர்காணலில் ஈழப் பிரச்சனை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும் எங்கள் இயக்கத் தோழர்களுக்கு மட்டுமின்றி தமிழ் உணர்வாளர்களுக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. ஈழத் தமிழ் மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் வைகோ என்பதை பூமிப்பந்தில் வாழும் பத்து கோடித் தமிழர்களும் நன்கு அறிவார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி 1981ம் ஆண்டிலிருந்து வீரமுழக்கமிட்டவர் வைகோ.
வைகோ, அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை எட்டு முறை சந்தித்து சிங்கள அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட வேண்டாம்; ஆயுத உதவிகள் அளிக்க வேண்டாம் எனக் கோரினார். ஆனால் இந்தியா போரை நிறுத்த முயற்சிக்கவில்லை. போர் முடிந்ததும் எங்களுக்காக இந்தப் போரை இந்தியாதான் நடத்தியது என்றார் ராஜபக்சே. அந்தக் காலகட்டத்தில் அப்போது ஆட்சியில் இருந்த மத்திய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டனம் செய்தவர் வைகோ. இதனை இப்போது நேர்காணலில் குறிப்பிட்டு வைகோ மீது புழுதி வாரித் தூற்றுவது எந்த நோக்கத்தில்? விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், தலைவர் வைகோ மீது அளவு கடந்த பாசமும் நேசமும் கொண்டிருந்தவர் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டுத் தலைவர்களை விமர்சனம் செய்தார் என்று திருமாவளவன் குறிப்பிடுகின்ற காலகட்டத்தில் வைகோ, பழ.நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள்தான் ஈழப்போரில் இந்தியாவின் நிலைப்பாடு தவறான அணுகுமுறை என்று கண்டனம் தெரிவித்தனர். தனியார் தொலைக்காட்சி நெறியாளர் வைகோ பெயரைக் குறிப்பிட்டு கேட்டபோதும் திருமா அதை கடந்து போனது வருத்தம் அளிக்கிறது” எனக் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மதிமுகவின் பங்கு மகத்தானது. அதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. ஒவ்வொருவரும் நெடுமாறன் உட்பட அவர்களுக்கு தகுந்தவாறு ஈழத்தமிழர் பிரச்சனையில் பங்களித்துள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.