தருமபுரம் ஆதீன குரு மகா சந்நிதானத்தின் ஞானரத யாத்திரையைத் துவக்கி வைக்க மயிலாடுதுறைக்கு நேற்று வருகை தந்த தமிழக ஆளுநருக்கு விசிக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி காட்டினர். அப்போது ஆளுநரின் பாதுகாப்பிற்காக வந்த வாகனங்களின் குறுக்கே கருப்புக்கொடியை எரிந்தும் தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின், "ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைப்களில் கட்டப்பட்டிருந்த கொடிகளைத்தான் வீசி எறிந்தார்கள் என்பதை காவல்துறை கூடுதல் இயக்குநர் மிக விளக்கமாக தெரிவித்துள்ளார். ஆளுநரின் பாதுகாப்பில் இந்த அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பேசினார்.
இந்நிலையில் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த பாஜக நினைப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ''பாஜக கட்சியை சார்ந்தவர்கள் திட்டமிட்டு பதற்றத்தை உருவாக்கப்பார்கிறார்கள். என்ன வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். திமுகவின் சமூக நீதி அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன்மீது கலங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் இங்கே ஒரு முக்கிய சக்தியாக மாறிவிட வேண்டும் என அவர்கள் கணக்குப்போட்டுச் செய்கிறார்கள். எனவே ஆளுநர் மீது கல்லெறிந்ததாகவோ, கொடி எரிந்ததாகவோ கூறுவது அபத்தமான அவதூறு'' என்றார்.