தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. அன்று பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி அனைத்துக் கட்சிகளும் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களை முடித்துக்கொண்டு, தொகுதிப் பங்கீட்டையும் முடித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், நசியனூர் நான்குமுனை ரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அப்போது அவர், “பழனிசாமி தலைமையிலான கூட்டணி பண மூட்டைகளை நம்பித்தான் தேர்தலில் நிற்கிறார்கள். கஜானாவை எல்லாம் அவர்கள் காலி செய்துவிட்டார்கள். தமிழகம் இன்று 6 லட்சம் கோடி கடனில் தள்ளாடுவதற்கு, இந்த ஆட்சியாளர்கள் தான் காரணம். உங்களை எல்லாம் ஆடு, மாடுகாளை விலைக்கு வாங்குவது போல வாங்கிவிடலாம் என ஆளுங்கட்சியினர் எண்ணுகின்றனர். அமைச்சர் தொகுதிக்கு ரூபாய் 100 கோடி, 200 கோடி, 300 கோடி என நிலைக்குத் தகுந்தாற்போலவும், மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு ரூபாய் 50 கோடி என நிர்ணயம் செய்து மக்களின் வரிப்பணத்தைச் செலவழிக்கின்றனர். டாடா பிர்லா எல்லாரும் அதிமுக அமைச்சர்களிடம் கடன்கேட்டு நிற்கின்ற சூழ்நிலைதான் தமிழகத்தில் உள்ளது. தேர்தல் முடிந்த பின்னர் அனைத்தும் வெளியேவரும் பாருங்கள். பணம் இருக்கும் மமதையில் தான் தமிழகத்தில் இந்த ஆட்டம் போடுகின்றனர் எனப் பேசினார்.