கொடநாடு கொலை, கொள்ளை விசாரணை மீண்டும் வேகம் பிடித்திருக்கிறது. கடந்த 2 வருடங்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லாத, 5 தொடர் மரணங்களை உள்ளடக்கிய இந்த வழக்கின் விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் கடந்த 13ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் அரசு தரப்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் நடத்திய விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த வழக்கில் கூடுதல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முறையீடு செய்தனர்.
அதன்படி உதகை பழைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சயானிடம் இதுகுறித்து 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் தன்னிடம் கூறியபடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூடலூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சஜீவன் ஆகியோரது தூண்டுதலின் பேரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது என சயான் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அதிமுக ஆட்சியில் இருந்ததால் உயிருக்குப் பயந்து தன்னால் உண்மையைக் கூற முடியவில்லை என சயான் வாக்குமூலம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும் என காவல்துறையினர் அவரிடம் தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த வழக்கில் சிலர் பிறழ் சாட்சியாக மாறலாம் என்றும், கூடுதலாக சிலர் சாட்சியங்களாக சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று (19.08.2021) தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைத்தலைவர் ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ''கொடநாடு கொலை வழக்கில் சயானிடம் விசாரணை நடத்த எந்த நீதிமன்றம் அனுமதி கொடுத்தது என்பதை முதல்வர் விளக்க வேண்டும். உண்மையான குற்றவாளியைப் பிடிக்க வேண்டும் என்றால், இதுவரை எங்கள் ஆட்சியில் பிடித்தது போலி குற்றவாளியா?. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக இதை மீண்டும் கையிலெடுத்துள்ளது'' என்றார்.
இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுகவினர் மீது எந்தத் தவறும் இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''முடித்துவைக்கப்பட்ட வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் முதல்வர் பெயரைக் கொடநாடு வழக்கில் சேர்க்க முயற்சி நடைபெற்றுவருகிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுகவினர் மீது எந்தத் தவறும் இல்லை. கொஞ்சம் இனிப்பு, பெரிய கசப்பு, பெருவாரியான காரம்... இதுதான் திமுக ஆட்சியின் 100 நாள் சாதனை'' எனக் கூறியுள்ளார்.