தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இனி இடமில்லை என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 23 நாட்கள் காவிரி பிரச்சனைக்காக குரல் கொடுத்தோம். தற்போது காவிரி நீர் தமிழகம் வந்துள்ளது. இதே போல் பாராளுமன்றத்தில் தமிழக உரிமைக்காக போராடுவோம்.
தேர்தல் கூட்டணி பற்றி தலைமை கழகம்தான் முடிவு செய்யும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி விட்டோம்.|
8 வழிச்சாலை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியாக கையாளுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. 8 வழி பசுமைச்சாலைக்காக மக்களை சமரசம் செய்யும் பணியில் முதல்வர் பழனிசாமி ஈடுபட்டுள்ளார்.
பா.ஜனதா தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறி வருகிறது. அது பா.ஜனதாவின் ஆசைதான். ஆனால் அவர்களின் ஆசை ஒருநாளும் நிறைவேறாது. பாரதிய ஜனதாவினரின் ஆசையை தமிழக மக்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்லை.
அமித்ஷா தமிழகத்தில் ஊழல் என்று கூறுகிறார். ராகுல்காந்தி பா.ஜனதாவில் ஊழல் என்றும், ஸ்டாலின், அ.தி.மு.க.வில் ஊழல் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் ஆட்சியை பிடிக்க தங்கள் இஷ்டம்போல் பேசி வருகிறார்கள். ஆளும் கட்சி மீது ஆதாரங்கள் இல்லாமல் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இனி இடமில்லை. தேர்தல்களிலும் திராவிட கட்சிகளால் மட்டுமே வெற்றி காண முடியும். தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியை திராவிட கட்சிகளே பாதுகாக்கும் என்றார். இவ்வாறு கூறினார்.