இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். குறிப்பாக 'அதிமுக உடனான கூட்டணி உறவில் விரிசல் ஏற்படுவது போன்று தோன்றுகிறதே' என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ''அதிமுகவுடன் பாஜக இன்றைக்கும் நாளைக்கும் கூட்டணியில்தான் இருக்கும். சில பேருக்கு கருத்து வேறுபாடுகள்தான் இருக்குமே தவிர அதை வைத்து கூட்டணி குலைந்து போகாது'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கும் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகமே தெரிவித்துள்ளாரே' என கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ''அதை எப்படி அவர் சொல்ல முடியும். அது அவருடைய சொந்த கருத்தாக இருக்கலாம். கட்சியினுடைய கருத்து அது அல்ல. அதை முடிவு செய்ய வேண்டியது பாஜகவும் அதிமுகவும்தான். திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. எப்பொழுதுமே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவை பொருத்தமட்டிலும் கலைஞர் முடிவெடுப்பார். அதிமுகவில் ஜெயலலிதா முடிவு எடுப்பார். அதேபோல் இன்றைக்கு அவரது கட்சித் தலைவர் என்ன முடிவு எடுப்பார் என்று பார்ப்போம். இதுவரைக்கும் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம்'' என்றார்.