நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் தொடங்கியுள்ளது. கொடி அறிமுக விழாவின் பொழுது வெளியிடப்பட்ட 'தமிழன் கொடி பறக்குது' என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிப் பாடல் ஒளிபரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பறை ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாநாடு மேடைக்கு வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய், தொண்டர்களை நோக்கி நடந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது அவர்கள் வீசிய கட்சித் துண்டை வாங்கி தனது கழுத்தில் அணிந்து கொண்டு நடந்து வந்தார். அதனைத் தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர், லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி தததும்ப த.வெ.க கொடியை விஜய் ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்சியின் தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் ‘பிறப்பெக்கும் எல்லாம் உயிருக்கும்’ என்று தொடங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. அந்த பாடலில் 'துப்பார்க்கு துப்பாய’ என்ற திருக்குறள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர், காமராஜர் வழியில் த.வெ.க பயணிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் செயல்படும் என்றும் பாடலில் கூறப்பட்டுள்ளது.