மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. தமிழக அரசின் 2020- 21 நிதிலை அறிக்கை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகஅரசின் 2020 - 21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது துறை சார்ந்த நிதி ஒதுக்கீடுகளின் ஒரு வருடாந்திர நிகழ்வாக இருக்கிறது. இதில் 'கணிக்கப்படுகிறது' 'எதிர் பார்க்கப்படுகிறது' என்ற சொல்லாடல்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
மத்திய அரசின் நிதி வருவாய் பகிர்வில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக பக்கம் 104ல் கூறப்பட்டுள்ளதோடு, நாடு தழுவிய அளவில் பொருளாதார மந்த நிலை இருப்பதாக பக்கம் 103, 115, 127 ஆகிய இடங்களில் இந்த நிதிநிலை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதன் பாதிப்பை மீறி தமிழகம் எழுவதாக நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பள்ளி கல்வித் துறைக்கு கூடுதல் நிதி, கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருட்களை காட்சிப்படுத்த அகழ்வைப்பகம் அமைத்திட நிதி, மசூதிகள், தேவாலயங்கள் ஆகியன பராமரிப்புக்கான நிதி தலா 5 கோடியாக உயர்வு, பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் கேமராக்கள் பொருத்துவது, மாற்று திறனாளிகளில் ஒரு பிரிவினரான பார்வையற்றோர், செவி திறன் குறைந்தோர் பயன்படுத்தும் வகையில் அதற்கான செயலிகளுடன் கூடிய திறன் பேசிகள் 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியது.
அதே சமயம் பூரண மது விலக்கு குறித்த அறிவிப்புகள், சிறுபான்மையினருக்கான சிறப்பு நலத்திட்டங்கள், புதிய வேலை வாய்ப்புக்கான உறுதிகள் ஆகியன இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. அடுத்த ஆண்டு தமிழகம் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் சூழலில் இந்த நிதி நிலை அறிக்கை குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது.
ஆனால் முழுக்கை சட்டையை எதிர்பார்த்தவர்களுக்கு அரைக்கை சட்டையே கிடைத்திருக்கிறது என்ற அளவிலேயே இந்த நிதி நிலை அறிக்கையை மனிதநேய ஜனநாயக கட்சி புரிந்துக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.