Skip to main content

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; 8 பேர் வாபஸ்

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

Erode East by-election; 8 people withdrew

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு பரிசீலனை நிறைவு பெற்றது.

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து நேற்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தியது. 

 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்து பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 121 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த வேட்புமனு பரிசீலனையில் 83 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் 80 பேர் இந்த பட்டியலில் உள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

 

இந்நிலையில், தற்போது வேட்புமனு பரிசீலனை நிறைவு பெற்றது. 83 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு இருந்த நிலையில், அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், சுயேச்சைகள் 7 பேர் என மொத்தம் 8 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். 75 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இன்று ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலை நடத்தும் அலுவலர் சிவக்குமார் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் இறுதிப்பட்டியலை வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின் வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். ஈரோடு கிழக்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களாக மூவர் உள்ளனர். காங்கிரஸ், அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்