சென்னை விமான நிலையத்தில் நேற்று பேட்டி அளித்த ரஜினியிடம், 7 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எந்த 7 பேர் என்று ரஜினி கேட்டார். எந்த 7 பேர் என்று அவர் கேட்டதால் விமர்சனங்கள் எழுந்தன.
இதுதொடர்பாக இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் குறித்து எனக்கு தெரியாது என்ற மாயை உருவாக்கப்படுகிறது. ஏழு பேர் யார் என்று தெரியாத அளவிற்கு ரஜினிகாந்த் முட்டாள் கிடையாது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் என்று அந்த கேள்வி கேட்டப்பட்டிருந்தால் உடன் பதில் சொல்லியிருப்பேன். எடுத்த எடுப்பிலேயே ஏழு பேர் என்று சொன்னதால் நான் புரியாமல் எந்த எழு பேர் என்று கேட்டேன். மற்றபடி, மனிதாபிமான அடிப்படையில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார்.
இன்னொரு கேள்விக்கு, பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே என்றும், பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி,
ரஜினிகாந்த் அவர்கள் யார் அந்த 7 பேர் என்று கேட்டதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அதற்கு முதலில் நன்றி கூற வேண்டும். ஏனென்று சொன்னால் அந்த 7 பேருடைய பின்னணி என்ன என்பது குறித்து ஒரு பொது விவாதம் உருவாக அவரது பதில் காரணமாக இருக்கிறது. கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இன்று காலை அவர் தனது நிலையை எடுத்துக்கூறி, அந்த 7 பேருடைய விடுதலைக்கு ஆதரவாக பேசியது வரவேற்புக்குரியது. எனவே அதனை மீண்டும் கிளறி விமர்சிக்க விரும்பவில்லை.
அடுத்து பாஜக குறித்து அவர் கூறிய பதில் என்பது, அவரது உள் மன ஓட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதாகத்தான் கருதுகிறேன். ஏற்கனவே இவரைப் பற்றி இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள், கர்நாடகாவின் காவி தூதர் என்று விமர்சித்தார். அதற்கு ஏற்பத்தான் இவரது கருத்துக்களும் அமைந்துள்ளது. இவ்வாறு கூறினார்.