Skip to main content

மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பில் 90 சதவீதம் முன்னுரிமை! தமிழக அரசு சட்டம் இயற்ற தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

THAMIMUN ANSARI

 

மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பில் 90 சதவீதம் முன்னுரிமை என்ற சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ம.ஜ.க. பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுவண் அரசின் அமைச்சரவை கூட்டத்தில் 19.08.2020 அன்று மத்திய அரசின் பணியாளர்களை தேர்வு செய்ய தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (NRA) அமைக்கப்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசின் பணிகளில் சேர்பவர்களுக்கு இது எளிதானது போல தோன்றினாலும், இது மாநில அரசுகளின் பணியாளர் தேர்வாணயங்களை பலமிழக்கச் செய்யக் கூடிய ஆபத்துகள் நிறைந்ததாக உள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இது பற்றி கூறியுள்ள ஒரு கருத்து பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.

 

தற்போது ரயில்வே, வங்கிப் பணி, மத்திய அரசின் பணியாளர் தேர்வுத்துறை ஆகியவற்றுக்கு நடைபெறும் இத்தேர்வு மத்திய அரசின் இதர துறைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றுள்ளார்.

 

இனி வரும் காலங்களில் மாநில மற்றும் யூனியன் பிரதேச தேர்வாணயங்கள், தனியார்த் துறை ஆகியவற்றுக்கும், இதில் பெறும் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு பணியாளர் தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

 

ஆக ஒரு வேலை வாய்ப்பு பணிக்கு இரண்டு தேர்வுகள் என்ற நிலையும் இதன் மூலம் திணிக்கப்படுகிறது. இந்தத் தேர்வு என்பது CBSE, NCERT பாடத் திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்படும் என்கிறார்கள். அப்படியெனில், மாநில அரசுகளின் பாடத்திட்டங்களின் படி படித்த மாணவர்களின் நிலை என்னவாகும்? என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. இதில் பின்தங்கிய சமூகங்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

 

இதன் மூலம் தமிழகத்தில் மண்ணின் மைந்தர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவதுடன், அயலாரின் ஆதிக்கம் ஒங்கவும் இது மறைமுகமாக துணை போகும். தமிழகத்திற்கு மட்டுமல்ல, இது வேறுபல மாநிலங்களுக்கும் ஆபத்தானதாகவே இருக்கிறது.

 

எனவே, மத்திய அரசின் இம்முடிவை தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும். சமீபத்தில் மத்திய பிரதேச பா.ஜ.க. அரசு மண்ணின் மைந்தர்களுக்கே வேலை வாய்ப்பு என பிரகடனம் செய்துள்ளது. ஏற்கனவே குஜராத், கர்நாடகா மாநில அரசுகளும் இதைச் சட்டமாக்கியுள்ளன.

 

http://onelink.to/nknapp

 

தற்போது தமிழகத்தில் மத்திய அரசின் பணியிடங்களில், வட இந்தியர் ஆதிக்கம் பெருகிவரும் நிலையில், மத்திய அரசின் NRA தொடர்பான முடிவு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தமிழகத்தில் மத்திய அரசின் பணியிடங்களில் 90 சதவீதம் மண்ணின் மைந்தர்களுக்கே என்ற சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

 

தமிழக அரசு மத்திய அரசின் தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், அனைத்து வேலை வாய்ப்புகளிலும் மண்ணின் மைந்தர்களுக்கே 90 சதவீதம் முன்னுரிமை என்ற சட்டத்தையும் நிறைவேற்றிட வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்