
தமிழ்நாடு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை, மீண்டும் கடந்த 8ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த பா.ஜ.க.வின் 4 உறுப்பினர்கள் தவிர மற்ற அனைத்துக்கட்சியினரும் ஆதரித்து நிறைவேற்றி மீண்டும் ஒரு முறை ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், ம.ம.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னரின் செயலைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதேபோல் அ.தி.மு.க.வும் சட்ட மசோதாவை ஆதரித்தே பேசியது. ஆனால், நீட் தேர்வை காங்கிரஸ் அரசுதான் கொண்டு வந்து என்று அதிமுக குற்றச்சாட்டை வைத்தது. அதை காங்கிரஸ் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல முற்பட்ட போது சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டென்று எழுந்த அவை முன்னவர் துரைமுருகன், “அவரைப் பேச அனுமதியுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார். இது சட்டமன்ற நிகழ்வை நேரலையில் பார்த்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தக் கூட்டத்தில் இறுதியாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஆளுநருக்கென்று தனிப்பட்ட கொள்கை கிடையாது. அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் அவர் நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும், ”தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க” என 3 முறை முழக்கமிட்டார்.
அதேசமயத்தில் (7ஆம் தேதி) ஆளுநர் டெல்லி செல்வதாக செய்திகள் வந்தன. ஆனால், திடீரென அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து ராஜ்பவன் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, ‘டெல்லிதான் அவர் விசிட்டுக்கு கடைசி நேரத்தில் பிரேக் போட்டுடுச்சு. காரணம், பேரவையில் இரண்டாம் முறையாய் நிறைவேறிய நீட் எதிர்ப்பு மசோதாவின் தன்மை, உறுப்பினர்கள் விவாதம், முதல்வரின் உரையில் இடம்பெறும் சொற்கள் எல்லாவற்றையும் முழுதாகத் தெரிந்துகொண்ட பிறகு, கவர்னரை அழைக்கலாம்னு அவரது பயணத்தை டெல்லி ஒத்தி வைச்சிருக்கு. இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு அனுப்பி வைத்த சட்ட மசோதாவின் நகலை, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறாராம் கவர்னர் ரவி. இனி டெல்லியிலிருந்து வரும் உத்தரவுக்கு ஏற்பவே ரவியின் செயல்பாடுகள் இருக்கும்’ என்கின்றனர் ராஜ்பவன் டெல்லி அரசியலை அறிந்தவர்கள்.