2019-2020ம் ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் இன்று (08.02.2019) தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதனை தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசின் 2019- 2020 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்ட அறிக்கையை துணை முதல்வர் மாண்புமிகு பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறைக்கு 28,757.62 கோடி ரூபாயும், உயர் கல்வித்துறைக்காக 4,584.21 கோடி ரூபாயும், மக்கள் நல்வாழ்வு துறைக்காக 12,563.83 கோடி ரூபாயும், வறுமை ஒழிப்புக்காக 1,031.53 கோடியும் ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம்.
அதே சமயம் விவசாயிகளுக்கான வங்கி கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும், டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்றும் எதிர்பார்ப்பு இருந்தது. அது பற்றி பட்ஜெட்டில் கூறப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
ஹைட்ரோ கார்பன் எடுப்பு திட்டம், மீத்தேன் எடுப்பு திட்டம் ஆகியவற்றுக்கு எதிரான கொள்கை முடிவுகள் எதுவும் இதில் கூறப்படவில்லை.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லாததும், குறைந்த பட்சம் மின் கம்பி வடங்களை (கேபிள் வயர்கள்) தரையில் புதைக்கும் அறிவிப்பு கூட இல்லாததும் வருத்தமளிக்கிறது.
சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மற்றும் கிரித்தவர்களுக்கு ஒரு சிறப்பு திட்டம் கூட இல்லாதது "யாரை திருப்திபடுத்த" என்ற கேள்வியை எழுப்புகிறது.
புராதான அந்தஸ்து பெற்ற துறைமுக மற்றும் மீன்பிடி நகரமான நாகப்பட்டினத்திற்கென ஒரு அறிவிப்பும் இல்லாததும் வருத்தமளிக்கிறது.
மற்றப்படி வழக்கமான அம்சங்களை கொண்ட ஒரு பட்ஜட்டாகவே இது இருக்கிறது. மாசி மாத குளிரை எதிர் பார்த்தோம். பங்குனி மாத புழுக்கமாக இருப்பதாக உணர்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.