தனியார் தொலைக்காட்சி நிருபர் படுகொலை சம்பவத்திற்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி ப்ரியா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. போதைப்பொருள் விற்பனை குறித்து செய்தி வெளியிட்டதால் ஏற்பட்ட படுகொலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். உண்மை செய்தியை வெளியிட்டால் இதுதான் கதி என்பது நமது நாட்டின் சாபக்கேடு.
காவல்துறையிடம் ஏற்கனவே உயிருக்கு ஆபத்து உள்ளது என்று புகார் அளித்தும் அதனைபொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தியது மோசமான செயலாகும். சாமானியர்கள் பாதுகாப்பு கோரினால் அலட்சியப்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். ஆட்சியாளர்களை காப்பாற்ற மட்டும் காவல்துறை நியமிக்கப்படவில்லை.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையும் நேர்மையும் கொலை செய்யப்படுவது சாதாரணமாகிவிட்டது'' இவ்வாறு கூறியுள்ளார்.