![tamilnadu cm edappadi palaniswami election campaign at trichy](http://image.nakkheeran.in/cdn/farfuture/bDeVxnsc3TvnFAcrxM0u_ZLFXfTBpb9pT5_Khd8CPGc/1617120097/sites/default/files/inline-images/eps%20ok121111.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மரக்கடை பகுதியில் இன்று (30/03/2021) அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "மக்களைக் குழப்பி, அனுதாபத்தைத் தேடி தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறார் ஸ்டாலின். நீட் தேர்வைக் கொண்டு வந்ததே தி.மு.க.வும், காங்கிரஸும் தான், அ.தி.மு.க. அல்ல. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்ட அனுமதி பெற்று அ.தி.மு.க. அரசு சாதனை செய்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் 60 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டத்தைத் துரிதமாகச் செயல்படுத்த பிரதமரிடம் இன்று நேரில் வலியுறுத்தினேன். காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவுற்றதும் திருச்சி மாவட்ட மக்களுக்கு தண்ணீர்ப் பிரச்சனையே இருக்காது. மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசுடன் அ.தி.மு.க. அரசு இணக்கமாக உள்ளது.
![tamilnadu cm edappadi palaniswami election campaign at trichy](http://image.nakkheeran.in/cdn/farfuture/NNfAlkbxWe1jNV6MoM5YZ-ZZvmzT0nDWEWC11Z8YoCs/1617120116/sites/default/files/inline-images/eps%20sso.jpg)
விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. நான் விவசாயி என்பதால் விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்களை உணர்ந்து திட்டங்களைச் செயல்படுத்துகிறேன். தேர்தல் அறிக்கையில் அறிவித்த எதையாவது தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது நிறைவேற்றியுள்ளதா? காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றியுள்ளோம். மக்கள் தான் நீதிபதிகள், உங்களுக்கு உழைக்கவே நாங்கள்; மக்கள் வைக்கும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். முக்கொம்பு அணை நடப்பாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும். திருச்சியில் மட்டும் பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியுள்ளது. குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், நீர் நிலைகள், தூர்வாரப்பட்டுள்ளதால், ஏரி, அணைகள் நிரம்பியுள்ளன.
![tamilnadu cm edappadi palaniswami election campaign at trichy](http://image.nakkheeran.in/cdn/farfuture/IRUBWinBgjZdqN78gG-K9TTVISQsDO-7snvYQxEfXSU/1617120128/sites/default/files/inline-images/t231.jpg)
ரூபாய் 9,300 கோடி மதிப்பிலான பயிர்க் காப்பீட்டுத்தொகையை அ.தி.மு.க. அரசு பெற்றுக் கொடுத்துள்ளது. காவிரி- குண்டாறு திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டம் பயன்பெறும். விவசாயிகளுக்குத் தண்ணீர் வழங்க தி.மு.க. ஆட்சியில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? காவிரியைச் சுத்தப்படுத்த 'நடந்தாய் வாழி காவிரி திட்டம், கல்லணை கால்வாய் திட்டம்' கொண்டு வரப்பட்டுள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த அனைவருக்கும் கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்" எனத் தெரிவித்தார்.