சேலம், கோட்டை மைதானத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “மு.க.ஸ்டாலினை கட்சியின் செயல் தலைவராக, முதலமைச்சராக முன்மொழிந்தவர் பேராசிரியர் அன்பழகன். அனைவரையும் சமமாக மதிக்கக்கூடிய பேராசிரியர் அன்பழகன் நமக்கு முன்னோடியாக விளங்குகிறார். தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். இது வாரிசு அரசியல் அல்ல. கலைஞரின் குடும்பத்திற்கு தி.மு.க.வினர் எப்போதும் நன்றி விசுவாசமாக இருப்போம்.
தி.மு.க.,வைக் கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்துக்கும் தலைவருக்கும் என்றும் நேர்மையோடு அவர்களோடு இருந்து பாடுபடுவோம். அதன் அடிப்படையில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் ஆதரிப்போம். வாழ்க என்றும் சொல்வோம். நன்றியோடு இருப்பவர்கள் தி.மு.க.வினர். எங்களை வாரிசு அரசியல் என்று சொல்லி மிரட்ட முடியாது” என்று தெரிவித்தார்.