நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவனை சக மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டம் தெரிவித்திருந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக நெல்லை வண்ணாரப்பேட்டையில் இந்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்பொழுது மேடையில் பேசிய திருமாவளவன், ''நாங்குநேரியில் நடைபெற்ற இந்த சம்பவம் திட்டமிட்டே நடைபெற்றிருக்கிறது. நாடு முழுவதும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சாதிய மதவாத மோதல்களை உருவாக்கி வருகிறது'' எனத் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ''யோகி ஆதித்யநாத் காலில் போய் நமது சூப்பர் ஸ்டார் விழுந்துவிட்டு வருகிறார். பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது. அவர் கட்சி ஆரம்பித்திருந்து ஒருவேளை தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக ஆகியிருந்தால் யோகி ஆதித்யநாத் அல்லவா முதலமைச்சர் ஆனது போல் இருந்திருக்கும். எவ்வளவு பெரிய வேதனையாக இருக்கிறது. அவர் மீது எவ்வளவு உயர்ந்த மதிப்பை நாம் வைத்திருந்தோம். தலைவர்களை சந்திப்பது, முதல்வரை சந்திப்பது பிரச்சனை அல்ல. ஆனால் இவர் போய் காலடியில் விழுகிறார். அதற்கு என்ன பொருள். நீங்கள் அவரை உயர்வாக மதிப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அது உங்களுக்குள் இருக்கின்ற உறவு. ஆனால் உங்களைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு உயர்வாக மதித்துக் கொண்டிருந்தார்கள். எப்படிப்பட்ட உறவு இருக்கிறது என்பதை ஒரு நிகழ்வில் காட்டி விட்டீர்கள். இப்படிப்பட்டவர்களின் கைகளில்தான் தமிழ்நாடு இன்று இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தான் கருத்து உருவாக்கம் செய்கின்ற இடங்களில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே நாம் பாதுகாக்க வேண்டும்'' என்றார்.