கடந்த மாதம் 20-ம் தேதி திருவாருரில் இருந்து மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று மாலை நாகர்கோவில் நாகராஜா திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய ஸ்டாலின், “நான் பிரச்சாரம் தொடங்கிய 20-ம் தேதியில் இருந்து எடப்பாடி பழனிசாமியிடம் கொடை நாடு கொலை வழக்கு, ஜெயலலிதாவின் மர்ம மரணம், பொள்ளாச்சி பாலியியல் இந்த 3 கேள்விகளுக்கு பதில் கேள்விகளுக்கு பதில் கேட்கிறேன். அதே கேள்விகளை இன்றும் கேட்கிறேன் ஏன் பிரச்சாரம் முடிகிற 16-ம் தேதி வரையும் கேட்பேன். 18-ம் தேதி வாக்கு பதிவு முடிந்து மே 23-ம் தேதி தோ்தல் முடிவுகள் வந்ததும் மத்தியிலும் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும். அதன் பிறகு எடப்பாடியிடம் அந்த 3 கேள்விகளுக்கும் பதில் கேட்க மாட்டேன் அதன்பிறகு சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனைதான் கொடுப்பேன். அது நிரந்தர ஆயுள் தண்டனையாக தான் இருக்கும். அந்த தண்டனையை பார்த்து நீங்களோ நானோ மகிழ்ச்சியடைவதைவிட உண்மையான அதிமுகவினர் எல்லையில்லா மகிழ்ச்சியடைவார்கள்.
நமது தலைவர் கலைஞா் மரணத்தை கூட சித்ரவதை செய்த கூட்டம்தான் எடப்பாடி கூட்டம். அண்ணாவுக்கும் காமராஜருக்கும் மண்டபம், வள்ளுவருக்கு கோட்டம், வீரப்பாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை, மொழிபோர் தியாகிகளுக்கும் சுதந்திர போராட்ட வீரா்களுக்கும் மண்டபம் எழுப்பிய தமிழினத்தின் ஓப்பற்ற தலைவர் கலைஞருக்கு ஆறடி இடம் கொடுக்க மறுத்தனர். அந்த இடத்தை பெற கலைஞருக்கு தகுதி இல்லையா? எடப்பாடியின் வீட்டுக்கு சென்று அவரின் கையை பிடித்து கெஞ்சினேன் முடியவே முடியாது என்றார்.
அதன்பிறகு நீதிமன்றத்தை நாடினோம் நீதிமன்ற தீர்ப்பு மட்டும் சாதகமாக வராமல் இருந்திருந்தால் நானும் எனது அண்ணன் அழகிரி, மைத்துனர் செல்வம், பொருளாளர் துரைமுருகன், டி.ஆா். பாலு மற்றும் தொண்டர்களோடு சோ்ந்து கலைஞரின் ஆசையை நிறைவேற்ற மெரினாவில் அண்ணாவின் சமாதி அருகே கலைஞரின் உடலை தூக்கி கொண்டு புறப்பட்டு இருப்போம்” என்றார்.