தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தமிழகத்தைக் குறி வைத்து தேசியக் கட்சிகள் களமிறங்க பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. தமிழகத்தில் மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், சுற்றுப்பயணங்கள் உள்ளிட்டவற்றை நடத்த அதற்கான பட்டியல்கள் தயாரித்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
அந்த வகையில், தமிழகத்தில் பிப்ரவரி கடைசி வாரத்தில் காங்கிரஸின் மகளிர் மாநாட்டை நடத்த முடிவு செய்திருக்கிறார் சோனியா காந்தி. சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி தலைமையில் அந்த மாநாட்டை நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தைக் குறிவைக்கும் பிரதமர் மோடி, தமிழர்களைக் கவர்வதற்காக கடந்த சில வருடங்களாகவே தமிழில் சில வாக்கியங்கள் பேசுவதையும், திருக்குறளை சுட்டிக்காட்டிப் பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். மோடியின் தமிழ் பேச்சு பல்வேறு தளங்களில் ஆரோக்கியமாக பார்க்கப்பட்டிருக்கிறது.
மூன்று நாள் தேர்தல் பரப்புரை பயணமாக தமிழகம் வந்த ராகுல் காந்தியும் தமிழர்களின் கலாச்சாரத்தையும், தமிழின் பெருமையையும் புகழ்ந்து பேசினார். அதில் மோடியின் தமிழ்ப் பேச்சையும் எதிர்மறையாக விமர்சித்திருந்தார். அந்த அளவுக்குத் தமிழர்களைக் கவர்வதற்காக தமிழ் மொழியை கையில் எடுத்துவருகின்றன தேசியக் கட்சிகள்.
பாஜக மோடியை தொடர்ந்து, காங்கிரசின் சோனியா காந்தியும் தமிழ் மொழியை கற்று வருகிறார். மொழியின் ஆளுமையை ஓரளவுக்கு புரிந்துகொண்டிருக்கிறார் சோனியா காந்தி. இந்த நிலையில், சோனியா காந்தி தமிழில் பேசுவதை வீடியோவாக தயாரிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.
அடுத்த மாதம் தமிழகத்தில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மகளிர் மாநாட்டில் சோனியாவின் தமிழ்ப் பேச்சு வீடியோவை பிரியங்கா ரிலீஸ் செய்வார் என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். சட்டமன்றத் தேர்தல் என்பதால் சோனியாவின் தமிழ்ப் பேச்சு, தேர்தல் பிரச்சாரத்தை மையப்படுத்தி இருக்கும் என்றும் காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.