கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருந்தாா். ஸ்டாலின் கூறிய இந்தக் கருத்தை திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவா்களான கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோரும் கூறிவந்தனர். திமுகவின் விவசாய அணியின் மாநில செயலாளராக இருந்துவந்த கே.பி.ராமலிங்கம், தற்போது 144 தடை உத்தரவு உள்ள நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லாத ஒன்று என்று கூறினார். கட்சித் தலைமை கூறிய கருத்துக்கு எதிராக கூறியதால் அவா் வகித்துவந்த திமுக விவசாய அணி மாநில செயலாளா் பதவியிலிருந்து அவரை மு.க.ஸ்டாலின் நீக்கினார்.
இந்த நிலையில் ராமலிங்கத்தை கட்சிப் பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணி தகவல் குறித்து விசாரித்தபோது, கே.பி. ராமலிங்கம் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு கட்சி மாறியவர். இவர் திமுகவில் இருந்த காலத்தில் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் திமுகவில் ராஜ்யசபா சீட் வேண்டும் என்று திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் ராஜ்யசபா சீட் திமுகவில் மறுக்கப்பட்டதால் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறுகின்றனர். அதனால் கட்சித் தலைமை தெரிவித்த கருத்துக்கு எதிராக செயல்பட்டார் என்றும் கூறுகின்றனர். இதனால் கட்சித் தலைமை அதிருப்தியில் ராமலிங்கத்தை கட்சிப் பதவியில் இருந்து நீக்கியுள்ளது என்கின்றனர்.