நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.
அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அதே சமயம் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் பாரபட்சமானது என ஒரு நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன், திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரெக் ஓ பிரையன், எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறுகையில், “இந்த பட்ஜெட் பாரபட்சமானது. இது ஆட்சியின் நாற்காலியை காப்பாற்றும் (குர்சி பச்சாவ்) பட்ஜெட் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த அரசை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றி மட்டுமே இந்த பட்ஜெட் யோசித்துள்ளது. நடுத்தர மக்களையும், விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தண்டித்ததுதான் இந்த பட்ஜெட் உச்சக்கட்டம் ஆகும். இது இந்த நாட்டின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானது. மத்திய அரசின் எந்த உதவியும் இல்லாமல் பல மாநிலங்கள் தவிக்கின்றன. அதனால்தான் இந்தியக் கூட்டணித் தலைவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர் எங்கள் அதிருப்தியைக் காட்டவும், பாகுபாட்டை நிறுத்தவும் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்துகின்றனர்” எனத் தெரிவித்தார்.