அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23ம் தேதி கூடவிருக்கிறது. இதன் காரணமாக நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மா.செக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அலுவலகத்தின் வெளியே இருந்த தொண்டர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். அதில் சிலர் ஓ.பி.எஸ். தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இது அதிமுக அரசியலில் இன்னும் பரபரப்பைக் கூட்டியது.
அதேபோல், நேற்று இரவு திடீரென ஓ.பி.எஸ் முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினர். மேலும், இன்று காலை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ். இருவரும் தனித்தனியே அவர்கள் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அப்படி ஈ.பி.எஸ் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், மாவட்டச் செயலாளர்கள் விருகை.ரவி, ஆர்.எஸ். ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, தி. நகர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒற்றைத் தலைமை தொடர்பாக தனித்தனியே ஆலோசனை நடைபெற்று நிலையில் தற்பொழுது வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களைச் சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டின் முன்பு தொண்டர்கள் முழக்கமிட்டுக் கொண்டிருந்த நிலையில் வெளியே வந்த ஓபிஎஸ் அவர்களை கை கூப்பி வரவேற்றார். ஆனால் செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்தார். முன்னதாக ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தரப்பு ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.