அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதிமுகவின் பொதுக்குழு நாளை நடைபெற இருக்கிறது. ஒரு பக்கம் பொதுக்குழு நடப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் இரட்டை தலைமைக்கு உருவாக்கப்பட்ட விதிகளை அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் இணைப்புக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரட்டை தலைமை தொடர்பான சட்ட விதிகளை நீக்கிவிட்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் அதிமுக இருந்தபொழுது இருந்த விதிகளை அமல்படுத்த இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் பொதுக்குழுவில் இப்போது கிடைத்த தகவல்கள் அனைத்தும் உறுதிபடுத்தப்படுமா என்பது தெரிய வரும்.