Skip to main content

“செந்தில் பாலாஜி சம்பாதிப்பதை மு.க. ஸ்டாலின் குடும்பத்தினருக்கு  தருவார்” - அண்ணாமலை 

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

"Senthil Balaji will give what he earns to MK Stalin's family" - Annamalai

 

“செந்தில் பாலாஜி சம்பாதிப்பதை மு.க. ஸ்டாலின் குடும்பத்தினருக்கு தருவார்” என பாஜக தலைவர் அண்ணாமலை கொட்டும் மழையில் வெற்றுச் சேர்களை நோக்கி உரை நிகழ்த்தினார்.

 

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் பா.ஜ.க.வின் 9 ஆண்டுக் கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொள்ள மாலை நான்கு மணிக்கே திருக்கடையூர் வந்துவிட்டார் அண்ணாமலை. பொதுக்கூட்டத்திற்கு போதிய கூட்டம் கூடவில்லை என்பதால் கூட்டத்தில் கலந்துகொள்ள தாமதமாகவே வந்தார் அண்ணாமலை. அண்ணாமலை பொதுக்கூட்ட மேடை அருகே வந்ததுமே மழை வெளுத்து வாங்கத் துவங்கியது. இருந்த கூட்டமும் கலைந்தது. சிலர் நாற்காலிகளை தலையில் கவிழ்த்துக்கொண்டு வந்த வாகனத்தைத் தேடி ஓடினர்.

 

மேடைக்கு மேற்கூரை அமைத்திருந்ததால் தனது பேச்சை கொட்டும் மழையில் துவங்கிய அண்ணாமலை, “மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலமாக பாரத பிரதமர் இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். தற்போது புதிய பாராளுமன்றத்தில் செங்கோலை திருவாசகம் கோளறு பதிகம் தேவாரத்தோடு பாரத பிரதமர் நிறுவி  மயிலாடுதுறை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். மயிலாடுதுறை மண்ணில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து தரப்பட்ட செங்கோலை சாட்சியாக கொண்டு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்.

 

"Senthil Balaji will give what he earns to MK Stalin's family" - Annamalai

 

டெல்டாகாரன் என்று கூறும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை ஒரு மூட்டை நெல்லுக்கு கமிஷன் பெறப்படுகிறது. நெல்லுக்கும் கரும்புக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு மட்டுமே வழங்குகிறது. திமுக அரசு வழங்கவில்லை. மீனவர்களுக்கு 2 லட்சம் வீடு கட்டித் தருவதாகக் கூறிய தமிழக அரசு இதுவரை ஒரு வீடு கூட கட்டித் தரவில்லை.

 

2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு போர் தொடுத்தபோது இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்றது காங்கிரஸ் கட்சி. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஈழத் தமிழருடன் தோளோடு தோள் நின்று, இன்று அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் நமது பிரதமர் நரேந்திர மோடி. ஈழம் நன்றாக இருந்தபோது ஈழத்துக்கும் பூம்புகாருக்கும் இடையே தொடர்பு இருந்தது அந்த தொடர்பு மீண்டும் வளர வேண்டும் என்பது நரேந்திர மோடியின் எண்ணம்.

 

பாட்னாவில் நடந்த கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் சென்றவர் மு.க. ஸ்டாலின். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரை முதல் ஆளாகச் சென்று சந்தித்தது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான். அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை வழங்காமல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

சாதாரண மக்கள் சம்பாதிப்பதை தனது குடும்பத்தாரிடம் தருவார்கள். ஆனால் செந்தில் பாலாஜி, தான் சம்பாதிப்பதை மு.க. ஸ்டாலின் குடும்பத்தினருக்கு  தருவார். இதுதான் சாதாரண மக்களுக்கும் செந்தில் பாலாஜிக்கும் உள்ள வித்தியாசம்.

 

நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்துவது எவ்வளவு முக்கியமோ அதேபோல கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய திமுக ஆட்சியை அகற்றுவதும் முக்கியமான கடமை” என ஆள் இல்லாத சேருக்கு அட்வைஸ் செய்து விட்டு மழையிலேயே கிளம்பினார் அண்ணாமலை.

 

 

சார்ந்த செய்திகள்