Skip to main content

செந்தில் பாலாஜி கைது; 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

Senthil Balaji Arrested; Court custody till 28th

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் மாற்று அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை முதல் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அவரது இதய ரத்தக் குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையில் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் காவேரி மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக உயர்நீதிமன்றத்தில் கொடுத்த முறையீடு குறித்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

 

செந்தில் பாலாஜியை காவலில் வைக்குமாறு அமலாக்கத்துறை கூறும்போது அதற்கு எதிராக வாதாட திமுக வழக்கறிஞர்களும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை உறுதி செய்து காவல் வைப்பது தொடர்பாக முடிவெடுக்க நீதிபதியே மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

 

இந்நிலையில் வரும் 28 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் என சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் விசாரணை நடத்திய நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். திமுக வழக்கறிஞர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ச்சியாக மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்க அனுமதி வேண்டும் எனவும் அவருக்கு உடனடியாக பெயில் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், இருதரப்பு வாதங்களையும் கேட்பதற்காக இருதரப்பு வழக்கறிஞர்களையும் நீதிபதி நீதிமன்றத்திற்கு வரச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்