மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் ஏழை - எளிய மக்களுக்கு இலவச அரிசி, காய்கறி பலசரக்கு உள்ளிட்ட பொருள்களை முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் தளபதி மாரியப்பன் சார்பில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கோவில் நகரமான மதுரை மாநகரின் கோவில்கள் திறக்காததால் வாழ்வாதாரம் இழந்ததாகப் பொதுமக்கள் கூறுவதாகக் கேட்ட கேள்விக்கு, 'கோவில்களைத் திறப்பது தொடர்பான கோரிக்கையை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே கோவில்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது தமிழக அரசின் எண்ணம் இல்லை. கரோனா தாக்கம் குறையும் பட்சத்தில் அதி விரைவில் கோவில்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
குடும்ப அட்டைகளை வழங்கினால் ரூபாய் ஐம்பதாயிரம் கடன் வழங்கப்படும் என்பது பற்றிய விளக்கம் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுவதாகக் கேட்ட கேள்விக்கு, 'வங்கிக் கிளைகளுக்குச் சென்று உரிய ஆவணங்களைச் செலுத்தினால் உரிய கடன் வழங்கப்படும்' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'அ.தி.மு.க. சார்பாக எந்தப் போராட்டமும் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க.வை பற்றி தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இதெல்லாம் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லு. அ.தி.மு.க.வை பற்றி இல்லாத ஒன்று சொல்லி கெடுதலை உருவாக்க வேண்டும் என்பதே தி.மு.க.வின் எண்ணமாக உள்ளது. முதலமைச்சர் மீது பற்றும் பாசமும் தமிழக மக்கள் கொண்டுள்ளனர். மற்ற மாநிலத்தில் உள்ள முதலமைச்சர்கள் அமைதியாக இருக்கும் நிலையில் நம்முடைய முதல் அமைச்சர் அள்ளி அள்ளி கொடுப்பதைப் பார்த்து பொறுக்க முடியாமல் தி.மு.க.வின் தில்லுமுல்லு தான், சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்புகிறது.
தேவை இருக்கும் பட்சத்தில் வெளியே வரவேண்டும். கட்டுப்பாடு என்பது பாதுகாப்பாக இருக்க வேண்டிதான் அரசு விதித்துள்ளது. மதுரையில் அ.தி.மு.க.வின் சார்பில் 2 லட்சம் பேருக்கு மேல் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது இன்னும் எத்தனை பேர் கேட்டாலும் நிவாரணம் தர தயாராக உள்ளோம் மதுரையில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதே எங்கள் எண்ணம்' எனத் தெரிவித்தார்.