கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாற்றுக் கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா நடந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாற்றுக் கட்சி உறுப்பினர்களை வரவேற்று, கட்சியில் இணைத்து உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "என்.எல்.சி. நிறுவனத்தில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. அதற்கான மாற்று இடம் கொடுக்கவில்லை. அதிகபட்ச இழப்பீடு வழங்கவில்லை. ஆனால் வட மாநிலத்தவர்களுக்கு மட்டும் வேலை கொடுக்கப்படுகிறது. தமிழக அரசு தமிழக மக்களுக்கான அரசாக இருந்து போராடி மக்களுக்கான உரிமையைப் பெற்றுத் தர வேண்டும். நிலத்தை மொத்தமாக எடுத்துக் கொண்டே இருந்தால் மொத்தமாக வெளியேறிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இனிவரும் காலங்களில் சகித்துக் கொண்டிருக்க முடியாது.
எங்கள் மக்கள் சொந்த நிலத்தைக் கொடுத்துவிட்டு வீடு, நிலம் இழந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதியில் கூட மின் இணைப்பு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நாங்கள் நிலம் கொடுக்கிறோம், அதிலிருந்து மின்சாரத்தை எடுத்து, எல்லா மாநிலத்துக்கும் கொடுக்கின்றனர். ஆனால் கர்நாடகாவில் காவிரி நீர் மட்டும் அந்த மாநிலத்திற்குச் சொந்தம் என்று கூறப்படுகிறது. அதேபோல் கேரளாவில் முல்லை பெரியார் அணை நீரும் அந்த மாநிலத்திற்கு என்று அளிக்கப்படுகிறது. அவரவர் வளம் அவரவருடையது என்று கூறும்போது தமிழ்நாட்டில் உள்ள வளம், மட்டும் பொதுவாக உள்ளது. அப்போது நாங்கள் என்ன ஏமாளியா? இனிமேல் நிலத்தைக் கையகப்படுத்தினால் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். கடுமையாக எதிர்ப்போம்,போராடுவோம்.
மத்திய அரசுப் பணிகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால் வட மாநிலத்தவர்களுக்கு மத்திய அரசுப் பணியில் முன்னுரிமை அளித்து வருகின்றனர். தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு 90 சதவீத வேலைவாய்ப்பு கேட்டோம். ஆனால் 80 சதவீத வேலைவாய்ப்பையாவது தரவேண்டும். ரயில்வே, என்.எல்.சி ஆகியவை தமிழகத்தில் இருக்கும்போது தமிழர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் கொடுத்த சர்க்கரை, அரிசி குஜராத்திலிருந்து வந்தவை. நாங்கள் நெல் விளைவிக்கவில்லையா?. நாங்கள் கரும்பு விளைவித்து ஆலையில் சர்க்கரை உற்பத்தி செய்கிறோம். ஆனால் குஜராத்திற்கும் , பீகாருக்கும் சென்று ஏன் சர்க்கரை வாங்க வேண்டும்? பனைமரத்திலிருந்து கள் இறக்குமதி செய்வதால் விவசாயிகள் பயனடைவார்கள். ஆனால் பனைமரத்தை பயனில்லாமல் செய்துவிட்டார்கள். அதனால் ஆங்காங்கே பனைமரங்கள் வெட்டப்பட்டு கேரளாவில் உள்ள செங்கல் சூளைக்கு விற்பனை செய்யப்படுவது மன வேதனையாக உள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் 50 பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. பனை மரங்களை அத்துமீறி வெட்டி, கடத்துபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அரசு அலட்சியம் காட்டாமல் உடனடியாக தலையிட்டு பனை மரங்கள் வெட்டி கடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் செயல்பாடு மிகக் கொடுமையாக இருக்கிறது. விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறித்து திடீரென சிப்காட் கட்டுகிறார்கள். கிருஷ்ணகிரியில் கூட 3000 ஏக்கர் நிலம் பறிக்கப்படுகிறது. திருவையாற்றில் பயிர்கள் விளைந்து வந்து துளிர் விடும் போது மண்ணைக் கொட்டி உயிரோடு ஒரு கர்ப்பிணியைப் புதைப்பது போல விளைநிலத்தில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்கிறார்கள். பல கோடி உயிர்களைக் கொள்வது உயிர்க் கொலை. இது கொடுங்கோல் முறையாகும். பயிர் இல்லை என்றால் வயிறு இல்லை, வயிறு இல்லை என்றால் உயிர் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம். 20 பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். 20 ஆண்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். தமிழ்நாடு என் நாடு, என் தேசம், தமிழ்த் தேசம். இது என் மொழி. இது என் காடு, என் அருவி, என் மலை, என் ஆறு, என் நிலம் என்று யார் என்னுடன் வந்து என் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்" என்றார்.