சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும், மக்களைக் கொண்டு தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் பேசினார். இந்த நிகழ்ச்சி தொடங்கும்போது பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘திராவிடம் நல் திருநாடு’ என்ற வார்த்தை விடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் நல் திருநாடு என்ற வார்த்தை விடுபட்டதற்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததற்கு பதிலளித்த ஆளுநர், “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முதல்வர் முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது” என்று பேசினார்.
உடனடியாக தமிழக முதல்வர், ஆளுநருக்கு எதிராக பல்வேறு கேள்விகளை முன்வைத்து கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இது குறித்து அவர் பேசியதாவது, “தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை? பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்’ என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் - உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா?” எனும் பல கேள்விகளை கேட்டு விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது. தமிழ்த்தாய் வாழ்த்தில் 2 வரியைத் தூக்கியதற்காக கொந்தளிப்பதா? ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது வராத கோபம் 2 வரியைத் தூக்கியதற்கு கொந்தளிப்பதா?. கீழடியில் கண்டெடுக்கப்பட்டது தமிழர் நாகரிகம்தான், திராவிட நாகரிகமோ அல்லது இந்திய நாகரிகமோ அல்ல. தமிழில் எழுத, படிக்கத் தெரியாத மூன்று தலைமுறைகளை உருவாக்கியதுதான் திராவிடத்தின் சாதனை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.