திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சாதனைகளை சொல்ல முடியாது. நாட்டு மக்கள் பட்ட வேதனைகளை வேண்டுமானால் சொல்ல முடியும். அதானியை வளர்த்துவிட்டது, அரசின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்த்தது தவிர இவர்கள் இந்த 9 ஆண்டுகளில் செய்த வேலை என்ன? எந்த துறையில் வளர்ச்சி உள்ளது? கல்வியில் மருத்துவத்தில் வளர்ந்துவிட்டீர்களா? ஒன்றும் இல்லை.
நாட்டைக் காப்பாற்ற காஷ்மீரில் இருக்கும் ஒருவர் வீட்டைக் காப்பாற்ற முடியவில்லை என்கிறார். பஞ்சாபில் நடக்கும் கலவரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2 பேர் இறந்துவிட்டார்கள். அவர்களுக்கு எந்த நிவாரணமும் கொடுக்கவில்லை. விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் கொடுத்தீர்கள். மத்திய அரசோ தமிழ்நாடு அரசோ அந்த வீரர்களின் குடும்பத்துக்கு என்ன செய்தது.
நாட்டுக்காக நான் போகிறேன்.. சண்டையில் சாகிறேன்.. நாட்டுக்காக உயிரைவிட்டால் என் வீட்டை நாடு பார்த்துக்கொள்ளும் என்கிற நம்பிக்கை வரவேண்டுமே. அப்படி இல்லையென்றால் அடுத்த தலைமுறை இளைஞர்கள் எப்படி ராணுவத்தில் சேர ஆர்வமாக வருவார்கள். சாலை விபத்தில் இறந்தால் கூட 3 லட்சம் ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால் ராணுவத்தில் இறந்தால் அவருக்கு என்ன இருக்கிறது” எனக் கூறினார்.