வத்தலகுண்டு மதிமுக நகர செயலாளர் தாவூத் இல்லத்தின் திருமண விழாவில் இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த வைகோ,
''ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்ட வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். எப்படி வழக்கை வேறு மாதிரி போட்டு, நக்கீரன் ஆசிரியரை சிறைக்கு அனுப்பலாம் என்று நேற்று ஆலோசனை நடத்தியிருக்கிறார். நான் எந்த வழக்கறிஞர் என்று சொல்ல விரும்பவில்லை. அதே வழக்கறிஞர் முதல் அமைச்சரையும் சந்தித்து ஒரு மணி நேரம் பேசியிருக்கிறார்.
நான் தமிழக ஆளுநருக்கும் சொல்லிக்கொள்கிறேன். தமிழக அரசுக்கும் சொல்லிக்கொள்கிறேன். நக்கீரன் ஆசிரியர் கோபால் தனி மனிதரல்ல. பத்திரிகைகளின் பிரதிநிதி. தொலைக்காட்சி, ஊடகங்களின் பிரதிநிதி. பத்திரிகை குரல் வலையையோ, ஊடக, தொலைக்காட்சி குரல் வலையையோ நெரிக்க முயன்ற உங்களைவிட சகல வல்லமைபெற்ற சர்வாதிகார பாசிச அரசுகள் மண்ணோடு மண்ணாக போயிருக்கிறார்கள். இந்த விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்''. இவ்வாறு கூறினார்.