சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும், கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த பதில்களும்..
கேள்வி: கரோனா தடுப்பு பணியில் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்கிறாரே காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி?
பதில்: குறை கூறுபவர்கள் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். கரோனா தாக்கத்தினால் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடோ, மின் தடையோ, வேறு எந்த ஒரு பிரச்சனையுமோ மக்களுக்கு இல்லை.
கேள்வி: சாத்தான்குளம் சம்பவத்தில் தவறு செய்தவர்களைக் காப்பாற்ற நினைக்கிறாரா தமிழக முதல்வர்?
பதில்: சாத்தான்குளம் சம்பவத்தில், தவறு செய்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியை முதல்வர் ஒருபோதும் எடுக்க மாட்டார். அதனால்தான், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார்.
கேள்வி: கரோனா தாக்கம் அதிகமாக இருக்கும்போது, முதல்வரும் அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர்களையும், அதிகாரிகளையும் பணி செய்யவிடாமல் தடுத்து, அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள் என்று விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டுகிறாரே?
பதில்: மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், முதலமைச்சர் என யாருமே கிராமப் பகுதிகளுக்குள் செல்லவில்லை என்றால், மக்களுக்கு பயம் வந்துவிடும். அதனால்தான் அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறோம். கரோனாவுக்கு முதலில் மருந்தே மன தைரியம்தான். மன தைரியத்தைக் கொடுக்கும் ஒரு ஆட்சியாக, எடப்பாடியார் ஆட்சி இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை எதற்காகவும், எப்போதும், பணி செய்யவிடாமல் தடுப்பது கிடையாது. அவர்கள் அனைவருமே அவர்களது பணியை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
கேள்வி: மு.க.ஸ்டாலின் கூறும் அறிவுரைகளை அரசு ஏன் கண்டுகொள்வதில்லை?
பதில்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கூறும் அறிவுரைகள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக இருந்தால், முதல்வர் ஏற்றுக் கொள்வார். அவை, அக்கப்போராக அல்லவா இருக்கிறது.