முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கோடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர் என சசிகலா வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யப்பட்ட விளக்க அறிக்கையில் தகவல் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஜெயா பிரிண்டர்ஸ், நமது எம்ஜிஆர் நிறுவனத்திற்கும் தானே உரிமையாளர் என்று சசிகலா கூறியுள்ளார். மதிப்பிழக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் மூலம் ரிசார்ட், ஷாப்பிங் மால், ஆலைகள் உள்ளிட்ட சொத்துகளை வாங்கியதை சசிகலா வருமானத் துறையிடம் முழுமையாக மறுத்துள்ளார் என்று தகவல் கூறுகின்றன.அதேபோல் கோடநாடு, க்ரீன் டீ எஸ்டேட், ராயல்வேலி, ஃ புளோரிடெக் பங்குதாரராக ஜெயலலிதா உடன் இருந்ததாகவும், ஜெயலலிதா மறைந்த பின் 2016- ஆம் ஆண்டு டிசம்பர் 6- ஆம் தேதி முதல் அந்த நிறுவனங்களுக்கு தானே உரிமையாளர் என வருமான வரித்துறை அறிக்கையில் சசிகலா கூறி இருப்பதாக தகவல் வெளியானது.
மேலும் சசிகலாவையும் அவரது சொத்துக்களையும் இளவரசியின் குடும்பம் தான் வருமான வரித்துறையிடம் காட்டிக் கொடுத்தது என்று உறவினர்கள் தரப்பில் இருக்கும் சசியின் ஆதரவாளர்கள் இளவரசி தரப்பை கடிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சொத்துக்குள் சம்மந்தப்பட்ட பிரச்சனையில் உறவினர்களின் நடவடிக்கையில் சசிகலா அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தன்னை உறவினர்களை சந்திக்க வருவதை சசிகலா தவிர்த்து வருவதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் அமமுக கட்சி நிர்வாக செலவிற்கும், தேர்தல் செலவிற்கும் சசிகலாவின் சொத்துக்கள் அதிக அளவில் பயன்படுத்த படலாம் அதனால் கவனமாக இருங்கள் என்று சசிகலாவின் விசுவாசிகள் சிலர் சசிகலாவிடம் கூறியதாக சொல்கின்றனர். இதனால் தனது சொத்துக்கள் அனைத்துக்கும் எந்தவித பிரச்னையும் வராமல் இருப்பதற்கு தனக்கு நெருக்கமான சில விசுவாசிகளை சசிகலா நியமிக்கலாம் என்றும் கூறுகின்றனர். இதனை அறிந்த தினகரன் தரப்பு அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் சிறையில் இருந்து விடுதலையாகி வந்ததும் சொத்துக்கள் விவரங்கள் பற்றியும், எந்த காரணித்திற்காக சொத்துக்கள் விற்கப்பட்டன என்ற கேள்வியையும் சசிகலா எழுப்புவார் என்கின்றனர். அதோடு சொத்துக்கள் விஷயத்தில் உறவினர்களின் நிலைப்பாடு என்ன என்றும் கேட்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் சசிகலாவின் உறவினர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.