தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் மிக உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு இ.பி.எஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி சசிகலா தனது தி.நகர் இல்லத்தில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “எந்த மாநிலமாக இருந்தாலும் ஆளுநரை எப்படி நடத்த வேண்டும் என்று முறை உள்ளது. அதன்படி தமிழக அரசும் செய்ய வேண்டும். மத்திய அரசுடனும் ஆளுநருடனும் சண்டை போட்டு காலத்தை ஓட்டினால், ஓட்டு போட்ட மக்களுக்கு அரசு என்ன செய்ய முடியும்.
திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால் அதிமுக ஒன்றுபட்டு இருக்க வேண்டும். ஒற்றுமையுடன் இருந்து வெற்றிபெற்று வெற்றியை எங்கள் தலைவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அந்த ஒரே காரணத்தை நினைத்து அனைவரும் ஒன்றிணைந்து திமுகவிற்கு தக்க பாடம் கற்பிப்போம்.
ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு இருக்கிறது. திமுகவினரின் காளைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். திமுககாரர்களிடம் ஸ்பெஷலான ஒரு விஷயம் உள்ளது. திமுக ஏதாவது ஒரு தவறைச் செய்கிறது என்றால், அதற்கு முன்பே அதனைச் சுற்றிலும் உள்ள விஷயங்களைச் சரிசெய்து விடுவார்கள். அதன் பின்பே அந்த தவறைச் செய்கிறார்கள். இதுகுறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதது போலத்தான் அரசாங்கத்தை நடத்துகிறார்கள்.
ஜல்லிக்கட்டு குறித்து மாவட்ட ஆட்சியர் பார்த்துக்கொள்வார் எனச் சொல்லிவிட்டு மாவட்ட ஆட்சியரும் மாவட்ட அமைச்சரும் சேர்ந்து கிட்டத்தட்ட 200 முதல் 300 காளைகளை பந்தயத்திற்கே விடவில்லை. காளைகள் எல்லாம் சோர்ந்து போன பின்பு தான் அதன் உரிமையாளர்கள் அழைத்துச் சென்றனர். அதற்கு காரணம் அவனியாபுரத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதன் பின் அவர்களது படங்கள் போட்ட உடைகள் தான் போட்டியை நடத்துபவர்கள் அணிந்து இருந்தார்கள். இதற்கு திமுக என்றும் அறிவாலயம் என்றும் பெயர் போட்டு நடத்தி இருக்கலாம்.
ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சந்திக்கத் திட்டம் உள்ளதா எனக் கேட்கின்றனர். ஆரம்பத்தில் இருந்து என் உத்தியைப் பார்த்துக்கொண்டு உள்ளீர்கள். அது விரைவில் நடக்கும். எங்கள் கட்சிக்காரர்களை நான் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது” எனக் கூறினார்.