
பசும்பொன் முத்தராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்தராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக சென்னையில் இருந்து வி.கே. சசிகலா நேற்று (29-10-23) மதுரை வந்தார்.
இதையடுத்து, மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “கடந்த இரண்டு ஆண்டுகளில் பசும்பொன்னுக்கு வராத எடப்பாடி பழனிசாமி தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் மட்டுமே வருகை தந்துள்ளார். இது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. விருப்பப்பட்டவர்கள் வருவதில் எந்த தவறும் இல்லை. தேர்தல் நேரத்தில் தான் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது தெரியும். எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆவார் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
யார் பிரதமராவது என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டியது. எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆகவேண்டும் என்பது அவர்களின் ஆசை. அவர்களது ஆசையை கூறுவது எந்த தவறும் இல்லை. எங்கள் கட்சிக்குள் நாங்கள் ஒரு குடும்பத்தை போல் தான். அதனால், ஓ.பி.எஸ் விருந்தாளி இல்லை. அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பாக நான் தொடர்ந்த சிவில் வழக்கில் இதுவரை தீர்ப்பு வரவில்லை. அந்த தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பு என தேர்தல் ஆணையமும் கூறியுள்ளது. இந்த விபரத்தை தான் அவர்கள் உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ளனர்” என்று கூறினார்.