அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம், வேலைக்குப் பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாகத் தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டு இருந்தது.
இதையடுத்து, அமைச்சரை தன்னிச்சையாக நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் எனப் பலரும் ஆளுநரின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் திரும்பப் பெறுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம் தற்போது வெளியாகி இருந்தது. அந்த கடிதத்தில், “செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி நீக்கம் குறித்து அட்டர்னி ஜெனரலின் கருத்தையும் கேட்பது சிறந்ததாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சரால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அட்டர்னி ஜெனரலை அணுகி அவரது கருத்தை கேட்கிறேன். அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு குறித்து மீண்டும் தெரிவிக்கப்படும் வரை பதவி நீக்கம் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி எழுதிய 5 பக்க கடிதத்தில், “அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல்வேறு முறைகேடு தொடர்பான புகார்கள் வந்தன. எனவே அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி கடிதம் எழுதி இருந்தேன். இதற்கு ஜூன் 1 ஆம் தேதி நீங்கள் கடிதம் ஒன்றை எழுதி இருந்தீர்கள். அதில், இடம்பெற்றுள்ள வார்த்தைகள் முறையான வார்த்தைகளாக இல்லை. நிதானமில்லாமல், கோபப்படுத்தும் வகையில் இடம் பெற்றிருந்தது. சட்டப்படியான கடமையைத் தாண்டி செயல்படுவதாகக் குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள். மேலும் ஜூன் 15 ஆம் தேதி நீங்கள் எழுதிய கடிதத்தில் இலாகா மாற்றம் செய்வது குறித்து தெரிவித்து இருந்தீர்கள். ஆனால் ஜூன் 14 ஆம் தேதியே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விசயத்தை நீங்கள் அந்த கடிதத்தில் தெரியப்படுத்தவில்லை. இது குறித்த தகவலை மறைப்பதாக நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன். மேலும் இலாகாக்களை மாற்ற முடியாது என்று நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தேன்.
அதற்கு நீங்கள் 15 ஆம் தேதி எழுதிய கடிதம் 16 ஆம் தேதி எனக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் நீங்கள் விரும்பத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். மேலும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குகிறேன். அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்தார் என்றால் அரசு இயந்திரம் செயல்படாமல் செயலிழந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது. செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்தால் விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.