தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்ட பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், சில நாட்கள் போராட்டங்களை நடத்திவிட்டு ஓய்ந்தனர். இதில், அதிமுகவில் பெரிய அளவில் பிரச்சனைகள் வெடித்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருந்த பலரும் வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து கடும் அதிருப்தியடைந்தனர். அறந்தாங்கியில் சில நாட்களில் பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஆனால், ஆலங்குடி, திருமயம் தொகுதியில் முடிவுக்கு வரவில்லை.
அதாவது திருமயம் தொகுதியில் வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கம் கே.கே.செல்வகுமாருக்கு கூட்டணியில் சீட்டு தருவதாக ஒப்பந்தம் செய்துவிட்டு கடைசியில் மா.செ வைரமுத்துவுக்கு சீட்டு கொடுத்ததால், செல்வகுமார் அதிருப்தியடைந்து சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அவரது ஜாதி ஓட்டுகளை ஒருங்கே பெற்றுவிடக் கூடாது என்பதற்காக மேலும் 5 செல்வகுமார்களை சுயேச்சையாக நிறுத்தி வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தினார்கள். அதேபோல, அதே தொகுதியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் அழகு.சுப்பையாவும் அதிமுக வேட்பாளருக்கும் எதிராக சுயேச்சையாகப் போட்டியிட்டார். இதனால், அதிமுக வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டது. அதனால், அழகு.சுப்பையாவை கட்சியிலிருந்து நீக்கம் செய்தனர்.
ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த தர்ம.தங்கவேல் சீட்டு வாங்கும் போது காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிமுகவில் இணைந்து 49 நாட்களே ஆகி இருந்ததால், பல வருடங்களாக கட்சியிலிருந்த கே.ஆர்.கணேசன் தலைமையில் முன்னாள் வேட்பாளர் ஞான.கலைச்செல்வன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கொத்தமங்கலம் தி.பாண்டியன், கறம்பக்காடு சண்முகநாதன், மாவட்ட வழக்கறிஞர் அணி நெவளிநாதன், மாஜி அமைச்சர் வெங்கடாசலம் மகள் தனலெட்சுமி, மாவட்ட விவசாய அணி மாசிலாமணி என பலர் ஒன்றிணைந்து 'வேட்பாளரை மாற்றுங்கள்' என்று ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். எடப்பாடி பிரச்சாரத்திற்கு வந்தபோது சாலை மறியல் செய்தனர். இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு சிலர் சமாதானம் செய்யப்பட்டனர். இறுதியில் தி.பாண்டியனுக்கு ஒ.செ பதவி கொடுக்கப்பட்டது.
வழக்கறிஞர் நெவளிநாதன் மற்றும் தனலெட்சுமி ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கரால்தான் தர்ம.தங்கவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதனால் விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கரை தோற்கடிப்போம் என்று இருவரும் விராலிமலை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதன் பிறகு புதுக்கோட்டை நகரச் செயலாளர் பாஸ்கர், புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஒருவர் என ஒரு சமாதான குழு மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் நெவளிநாதனுக்கு மாநில கட்சிப் பதவி வழங்குவதாக வடக்கு மா.செ வும் விராலிமலை வேட்பாளருமான அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவாதக் கடிதம் கொடுத்தார். அதனால் வேட்பு மனுவை ந.செ. பாஸ்கருடன் சென்று திரும்பப் பெற்றார்.
ஆனால், மாஜி அமைச்சர் வடகாடு வெங்கடாசலம் மகள் தனலெட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகாததால், தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டார். இவரை விவசாய அணி மாசிலாமணி இயக்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரது தரப்பினர் இதனை மறுக்கின்றனர். இந்த நிலையில் தேர்தல் முடியும் வரை காத்திருந்த அமைச்சர் தனக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக தலைமைக்கு பரிந்துரை கடிதம் எழுதிய நிலையில், நேற்று கே.ஆர்.கணேசன், அவரது மகன் பாண்டியன், தனலெட்சுமி, மாசிலாமணி ஆகியோரை நீக்குவதாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அமைச்சருக்கு எதிராக செயல்பட்டவர்களின் மற்றொரு பட்டியலும் கட்சித் தலைமையில் பரிசீலனையில் உள்ளதால் மேலும் பலர் நீக்கப்பட உள்ளதாக ர.ர.க்கள் கூறுகின்றனர். தேர்தலுக்கு முன்பு நீக்கி இருந்தால் தேர்தலில் பாதிக்கும் என்பதால் தேர்தல் முடிந்த பிறகு நீக்கப் பணிகள் தொடர்கிறது.