Skip to main content

‘ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா?’ - ஆ. ராசா கடும் கண்டனம்!

Published on 05/11/2024 | Edited on 05/11/2024
A Rasa strongly condemned for actress kasthuri

ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? என திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘பிராமண சமுகம் ஒடுக்கப்படுகிறது’ என்ற பெயரில் சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. ஊடகத்தின் கவனத்தை ஈர்க்க திராவிட இயக்கத் தலைவர்களைக் குறிப்பாகத் தந்தை பெரியார், கலைஞர் உள்ளிட்டவர்களை அந்த ஆர்ப்பாட்டத்தில் இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார்கள். பிராமணர்கள் பாதுகாப்பு வலியுறுத்தல்' என்ற போர்வையில் திமுக அரசுக்கு எதிராகக் களங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

'மனிதராகப் பிறந்த அனைவரும் சமமானவர்களே என்ற அறிவியல் உண்மைக்கு மாறாக தம்மை உயர் சாதியினராகக் காட்டிக் கொள்ளக் குறிப்பிட்ட வகுப்பினர் இப்போதும் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான் அவர்கள் நடத்தியிருக்கும் ஆர்ப்பாட்டம். அது பாதுகாப்பு வலியுறுத்தல் ஆர்ப்பாட்டம் அல்ல. தன் சமூக பெருமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம். பிரதமர் மோடி ஆட்சியில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் செயலாளராக இருப்பவர்களின் 90 விழுக்காட்டுக்கும் மேலானோர் பிராமணர்கள். மற்ற பிரிவினர் இவர்களைக் காட்டிலும் தகுதி பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத் துறைகளை நிர்வகிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அதுபோலவே, நீதிபதிகளில் மிகப் பெரும்பான்மையினர் உயர் ஜாதியினராக உள்ள நிலை பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து வருவதை உயர் பொறுப்பில் உள்ளோரே சுட்டிக்காட்டும் நிலை உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டு முறையை சட்டப்படி நடைமுறைப்படுத்தி மனிதர்கள் யாராயினும் அவர்களுக்கு பாரபட்சம் காட்டாமல், கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தென்னகத்தில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பிராமணர்கள் தங்களை உயர் சாதியினராகவும், மற்றவர்கள் தங்களைவிடத் தாழ்ந்தவர்களாகவும் எண்ணிச் செயல்படுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?. மதத்தில் ஏறத்தாழ 90 சதவிகித மக்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக பட்டியலினத்தவராகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில், 1916ஆம் ஆண்டு தொடங்கிய நீதிக்கட்சி, திமுக போன்ற கிராவிட இயக்கங்கள் இந்த 90 சதவிகித மக்களின் சுயமரியாதைக்காகப் போராட்டம் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திராவிட இயக்கம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், தந்தை பெரியார் முன்னெடுத்து நடத்திய போராட்டங்களாலும் வேள்விகளாலும்தான் இன்றைக்கு ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான், ‘பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம், ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்’ என முழக்கமிட்டார் கலைஞர். ஒடுக்கப்பட்டவர்கள் உயர்வுக்கு வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் அவர்கள் மீது இன்றைக்கும் களங்கத்தை வீசுகிறார்கள். "பிராமணர் அல்லாதார் பதவிகளுக்கு வந்தால் வஞ்சம் வாங்குவார்கள் எனச் சொல்லி ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை மிக மோசமாக இழிவுபடுத்தியிருக்கிறார் முன்னாள் நடிகை கஸ்தாரி.  தனியார் தொலைக்காட்சி டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நடிகை கஸ்தூரி, ‘திறமை அடிப்படையில் பிராமணர் அல்லாதார் பதவிகளுக்கு வந்ததால் லஞ்சம் வாங்குகின்றனர்’ என்று பேசி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகத்தினர் என ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவரையும் மிக மோசமானவர்களாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார். பிராமணர் சமூகம் உயர்வானது என நிலைநிறுத்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் 'குற்றப்பரம்பரை' என வர்ணம் அடித்திருக்கிறார்.

A Rasa strongly condemned for actress kasthuri

‘தெலுங்கர்கள் அந்தப்புரத்துச் சேவகர்கள்’ எனச் சர்ச்சை கருத்தைச் சொல்லிவிட்டு, ‘அப்படி சொல்லவில்லை’ என வியாக்கியானம் பேசுகிறார். சினிமாவில் மார்க்கெட் போன பிறகு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஊடக வெளிச்சம் தன் மீது விழ, அதன் மூலம் அரசியல் அங்கீகாரம் பெற பிற சமுதாயத்துக்கு பெண்களையும் அதிகாரிகளையும் கேவலமாகச் சித்தரிப்பதை அனுமதிக்கவே முடியாது. இது இன்னொரு ஆரிய ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு. அதனைத் திராவிட மாடல் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஆரியத்தை எப்போது தலைதூக்க விட மாட்டோம். தெலுங்கர்களை மட்டுமல்ல.. பெண்களையே கஸ்தூரி கேவலப்படுத்தியிருக்கிறார். ‘அந்தப்புரத்து சேவகர்கள்’ என்று ஒரு பெண்ணே பெண் இனத்தையே கேவலமாகச் சித்தரிப்பவர்களுக்கு மற்ற இனத்தைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது?.

இந்து கோயில்களுக்குப் பெண்களை நேர்ந்து விடுவதைச் சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்து, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைச் சென்னை மாகாண சட்டமன்றத்தில் 1947இல் நிறைவேற்றி தேவதாசிகளுக்குத் திருமணம் செய்யும் உரிமையைத் பெற்றுத் தந்த மண் தமிழ்நாடு. இங்கே ஆரியம் வெற்றி பெறாது. ‘பட்டியலின மக்களுக்கு இருப்பதுபோல, பிராமணர்களைப் பாதுகாக்கச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்’ என அந்த ஆர்ப்பாட்டத்தில் முழங்கியிருக்கிறார்கள். பட்டியலினத்தவரை மிகவும் கீழ் சாதியினராக நினைப்பவர்கள், அவர்களுக்கு இருப்பது போலவே சிறப்புச் சட்டம் வேண்டும் என்பதைக் கேட்டு சிரிக்கத்தான் தோன்றுகிறது. எல்லா சமூகத்தினரைப் போலவே பிராமண சமுகமும் எந்த பிரச்னையும் இல்லாமல் இங்கே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஏதோ நாளும் அநீதி இழைக்கப்படுவதாகவும், அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு ஒடுக்கப்படுவதாகவும்கூறி பொய்யான தோற்றத்தைக் கட்டமைக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

A Rasa strongly condemned for actress kasthuri

அரசுத் துறை உயர் பதவிகள் என்றாலும் தனியார்த் துறை பணிகள் என்றாலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளாக இருந்தாலும் அனைத்து உயர் அதிகாரங்களையும் அனுபவித்துக் கொண்டு, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஒதுக்கி வைக்க முயற்சி நடக்கிறது என்றெல்லாம் கூப்பாடு போடுவது, பட்டியல் சமூக மக்களுக்கான சிறப்புச் சட்டங்களைக் கேலி செய்யும் முயற்சி. அனைத்து சமுகத்தினரும் பாதுகாப்பாக வாழ்வதற்கோ, விரும்பிய தொழிலை நிம்மதியாக செய்வதற்கோ எந்தவொரு தடையும் தமிழ்நாட்டில் இல்லை என்பது நாடறிந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்கிறது. சாதி மோதல்களோ மதக் கலவரமோ இல்லாமல், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கொள்கையைக் கடைப்பிடித்துச் செல்கிறது. சமாதான சகவாழ்வு, சமத்துவ நல்லிணக்கம் என்ற அடிப்படையில் இயங்கி வருகிறது.

சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் தமிழ் மண்ணில் சமூக அமைதியைக் குலைக்க, ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அவதூறு பிரசாரத்தை மேற்கொண்டு பீதியைக் கிளப்புவது உள்நோக்கம் கொண்டது. பிராமண சமூகத்தினருக்கு எதிராக எந்த சிறு வன்முறையும் தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் நடைபெறவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக்கான சட்டத்தை நீர்த்துப் போக வைப்பதற்காகவோ அல்லது தங்கள் சமூகம் மோசமாகப் பாதிக்கப்படுவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கவோ திட்டமிடுகிறார்கள் என்பது அப்பட்டமாகவே வெளிப்பட்டிருக்கிறது. திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களிலேயே ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம் என்றிருக்கிறது; அவற்றில் திமுக என்றும் உறுதியாக இருக்கிறது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அதனை நிறைவேற்றியும் வருகிறது.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, திராவிட மாடல் ஆட்சியின் முதன்மையான இலக்கு 'அனைவருக்கும் அனைத்தும்; எல்லோருக்கும் வளர்ச்சி; எளியோருக்கும் ஏற்றம்' என்பதுதான். வாய்ப்புகளை உருவாக்கி, புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு அந்த வாய்ப்புகள் சென்றடையச் செய்யவே நாளும் பாடுபட்டு வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு. வன்முறையிலோ வெறுப்பு அரசியலிலோ என்றைக்கும் நம்பிக்கையற்ற அரசு இது. வெறுப்பின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடவும் திராவிட மாடல் ஆட்சிக்குக் களங்கம் கற்பிக்கவும் எடுக்கப்படும் முயற்சிகள் ஒருபோதும் இம்மண்ணில் வெற்றி பெறாது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்