தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு செய்துவருகிறது. அந்தவகையில், திமுக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கியுள்ளது. மேலும், நேற்று (03.03.2021) கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் திமுக பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது.
ஆனால், மாலை வருவதாக இருந்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவில்லை. இதற்கு காரணம், 2011ஆம் ஆண்டு சட்மன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பிரம்மாண்டமான கூட்டணி. காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அப்போதே, கலைஞர் காலத்திலேயே விசிகவிற்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது இரண்டு எம்.பி.களை வைத்திருக்கும் விசிகவிற்கு 12 தொகுதிகளையாவது கொடுக்க வேண்டும் என்று கேட்பதாக தெரிகிறது. ஆனால், 6 தொகுதிகள் தருவதாகவும், அதில் 4 தனி தொகுதியும், 2 பொது தொகுதியும் என திமுக தலைமை சொல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரட்டை இலக்கில் கொடுத்தால் போதும் என்று கேட்டதற்கு, திமுக பிடிவாதமாகச் சொல்லிவிட்ட காரணத்தாலேயே, திருமாவளவன் அறிவாலயத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (04 மார்ச்) விசிக ஆலோசனைக் கூட்டம் நடத்திவருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே முடிவுகள் தெரியவரும். அதேவேளையில் திமுகவுடனான கூட்டணியில் எந்தப் பிரச்சனையுமில்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.