இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 37 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன். மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை; ஏமாற்றமே. திருப்தியில்லாத, ஏமாற்றமடைந்த விஷயம் என்னவென்று பின்னர் கூறுகிறேன் எனக் கூறியிருந்தார். ஆனால் கூட்டத்தில் என்ன மாதிரியான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது எனக் கூறப்படவில்லை.
இந்நிலையில் தற்போது மக்கள் மத்தியில் தமக்கு இருக்கும் செல்வாக்கு குறித்து ரஜினி அந்தக் கூட்டத்தில் ஆலோசித்ததாகவும், புதிய கட்சி அறிவிப்பை எங்கு வெளியிடுவது என்பது பற்றியும் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் 2021 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி என ரஜினி கூறியிருந்தார். தற்போது கூட்டணி என்ற முடிவுக்கு வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்கு தமது கட்சியே தலைமை தாங்கும் என ரஜினிகாந்த் பேசியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.