மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், விருதுநகரில் நடைபெற்ற விலைவாசி உயர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி "எடப்பாடி பழனிசாமி தலைமையில் எப்போது நல்லாட்சி மலரும்? திமுக ஆட்சி எப்போது வீட்டுக்கு அனுப்பப்படும்? என தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மகனுக்கு பட்டாபிஷேகம், அதிகார துஷ்பிரயோகம், குடும்ப ஆட்சி, விலைவாசி உயர்வு ஏழை மக்களை வாட்டி வதைக்கிறது இந்த திமுக ஆட்சி.
ஆவின் பால் முதல் அனைத்து விலைகளும் கூடிவிட்டன. இன்றைக்கு வீட்டு வரி, சொத்து வரி சிமெண்ட் விலை கூடிவிட்டது, செங்கல் விலை கூடிவிட்டது, மணல் விலை கூடிவிட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டன. திமுக ஆட்சியில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்துவிட்டது. திமுக ஆட்சியின் தவறுகளை மறைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி மீது வீண் பழி போடுவது, மக்களை திசை திருப்ப ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்குவது போன்ற வேலைகளில்தான் திமுக ஈடுபட்டு வருகிறது. இந்த ஆட்சியில் வீடு கட்ட நினைத்தாலும் வீடு கட்ட முடியவில்லை. 10 லட்சம் ரூபாய்க்கு வீடு கட்ட நினைத்தால், இன்று 15 லட்சம் செலவாகிறது. அனைவரும் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.
திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். வாக்களித்த நாட்டு மக்களைப் பற்றியோ, தமிழகத்தில் இளைஞர்களின் வாழ்க்கை நிலை குறித்தோ சிந்திக்க அவருக்கு நேரமில்லை. தனது குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியில் ஏழை மக்களின் நலன் கருதி மக்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காகவே, எந்த விலையையும் கூட்டவில்லை. எந்த வரியையும் கூட்டவில்லை. நல்லாட்சியைக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஒரு பொற்கால ஆட்சியைக் கொடுத்தவர். மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மலர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது." என்று பேசினார்.