காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் 3,970 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டின் குமரியில் துவங்கிய இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு ராகுல் காந்தி மேற்கொண்டார்.
ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்தில் அவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பல மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கு கொண்டனர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்து எம்.பி. கனிமொழி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் காந்தியின் நினைவுநாளான இன்றுடன் நிறைவடைந்தது. ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தை நிறைவு செய்தார். நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி. உரையாற்றினார்.
இதையடுத்து நிறைவு விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “பாஜக தலைவர்கள் கூறுவது போல் காஷ்மீரில் அமைதி திரும்பவில்லை. படுகொலைகள், குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எனக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் நான் இதைப்பற்றி பேசும்பொழுது பாதுகாப்பு மேம்பட்டு இருந்தால், ஏன் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்று என்னிடம் திருப்பி கேட்டனர்.
நான் காஷ்மீரில் நுழைந்த 21ம் தேதி முதல் தற்போது வரை காங்கிரஸ் கட்சி தான் எனக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. காஷ்மீரில் மிக நல்ல முறையில் இருந்தால் பாஜகவினர் ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரை ஏன் பாதயாத்திரை நடக்கக் கூடாது. மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரை என்னை போன்று யாத்திரை நடத்தத் தயாரா? என அவருக்கு சவால் விடுகிறேன்.
எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கிறது என பாஜக கூறி வருகிறது. எந்த அடிப்படையில் அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. பாஜகவிற்கு எதிராகவே அனைத்து எதிர்க்கட்சிகளின் பார்வையும் உள்ளது. அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடிப் பேசி ஒற்றுமையுடன் உள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு இடையில் பாகுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவர்கள் பாஜகவை எதிர்ப்பதில் ஒற்றுமையாகவே உள்ளனர்.
இந்த போர் ஆர்எஸ்எஸ் - பாஜக சித்தாந்தத்திற்கு எதிரானது. ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். நடைப்பயணம் மேற்கொண்டபோது ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் மக்களைச் சந்தித்தேன். இங்கு நடைபெற்று வரும் நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. இந்திய ஒற்றுமை பயணம் மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் தேசிய அரசியலில் பிரம்மாண்ட நிகழ்வை உண்டாக்கும் என நம்புகிறேன். ஆனாலும் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது” எனக் கூறினார்.