



திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பாக இன்று பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அந்தவகையில் சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த ராதாரவி பேசினார்.
அப்போது அவர், “அண்ணாமலையை இன்று இவ்வளவு பெரிய ஆளாக வளர்த்துவிட்டது திமுக நபர்கள்தான். நாம் அதற்காக அவர்களிடம் நன்றியோடு இருக்க வேண்டும். எந்த நேரமும் போய்விடுமென்று (ஆட்சி) அவர்களுக்குத் தெரியும். எப்போது ஓலை வருமென எதிர்பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். மகாராஷ்டிராவில் செய்தோம். அதிலும் பெருந்தன்மையாக அவ்வளவு எம்.எல்.ஏ.க்களை வைத்துகொண்டும் துணை முதல்வர் பதவியைத் தான் வாங்கியிருக்கிறோம். இந்தியாவிலேயே இரண்டே இரண்டு பெரிய அக்யூஸ்டுகள் இருக்கிறார்கள். ஒன்று மோடி, மற்றொன்று அமித்ஷா” என்று தெரிவித்துவிட்டு கொடுமையான சொல்கொண்டு அதனை விவரித்தார்.
மேலும் பேசிய அவர், “பத்தாயிரம் முறை ஒன்றிய அரசு என்றாலும், திராவிட மாடல் என்றாலும் சரி அதனை கண்டுக்கவே மாட்டோம். யாரோ ஒருவர் உங்களை தட்டிவிடுகிறார்கள். அவரைத் தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று பேசினார். மகாராஷ்டிரா சம்பவம் குறித்து பெருமையாக அவர் பேசியபோது அருகிலிருந்தவர்கள் குறுக்கிட்டு திருத்தம் செய்ய முற்பட்டனர். அப்போதுதான் அவர், பெருந்தன்மை குறித்துப் பேசி அந்த விவகாரத்தை மடை மாற்றினார்.