புதுக்கோட்டை என்பது இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தன்னாட்சியாக இருந்து இந்தியாவில் இணைக்கப்பட்ட சமஸ்தானம். தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில் கல்வி, மருத்துவம், கலை, இலக்கியம் எதற்கும் குறையில்லை. தனி ஒரு சட்டமன்றத்தையே நடத்திய பெருமையும் இந்த சமஸ்தானத்திற்கு உண்டு.
சுதந்திர இந்தியாவில் புதுக்கோட்டை சமஸ்தானம் இணைக்கப்பட்ட போது சமஸ்தானத்தின் கஜானா முதல் பழமையாக கட்டிடங்களும் இந்தியாவுக்காக வழங்கப்பட்டது. இன்றும் அந்த கட்டிடங்கள் தான் நிமிர்ந்து நின்று ஆட்சி செய்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு பொது அலுவலகங்கள், பழைய நகர்மன்றம், மருத்துவமனைகள், இப்படி அனைத்து அரசு அலுவலகங்களும் தொண்டைமான் மன்னர்களால் கட்டிக் கொடுக்கப்பட்டது தான். அவர்களால் குடிதண்ணீருக்காக குளங்களும், வீதிகளின் அழகையும் இணைத்துக் கொடுத்தார்கள். ஆனால் இன்றைய புதுக்கோட்டையில் குடிக்க தண்ணீர் இல்லை.
குளங்கள் ஆக்கிரமிப்பால் மறைந்த போது.. நேர்கொண்ட வீதிகளை காணவில்லை. இத்தனை பெருமை பெற்ற புதுக்கோட்டையில் 1951 முதல் 2004 ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் புதுக்கோட்டையும் ஒன்றாக திகழ்ந்தது. ஆனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்காக தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் அரசியல் லாபத்திற்காக புதுக்கோட்டை தொகுதியை புரட்டிப் போட்டுவிட்டார்கள். தன்னாட்சி அதிகாரமும், மாவட்ட அந்தஸ்தும் கொண்டதாக உள்ள புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினருக்காக 4 தொகுதிகள் பக்கம் பார்க்க வேண்டியுள்ளது.
புதுக்கோட்டை தொகுதியில் வென்று பாராளுமன்றம் சென்றவர்கள்..
1951 - கே.எம். வலதரசு - கிசான் மஸ்தூர் பிரசா கட்சி, 1957 - எப். இராமநாதன் செட்டியார் – காங்கிரசு, 1962 - ஆர். உமாநாத் - இந்திய பொதுவுடமை கட்சி, 1967 - ஆர். உமாநாத் - இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சிஸ்ட்), 1971 - கே. வீரய்யா – திமுக, 1977 - வி. எஸ். இழஞ்செழியன் – அதிமுக, 1980 - வி. என். சாமிநாதன் – காங்கிரசு, 1984 - என். சுந்தரராசு – காங்கிரசு, 1989 - என். சுந்தரராசு – காங்கிரசு, 1991 - என். சுந்தரராசு – காங்கிரசு, 1996 – திருச்சி என். சிவா – திமுக, 1998 – இராசா.பரமசிவம் – அதிமுக, 1999 - எஸ். திருநாவுக்கரசு – எம்.ஜி.ஆர் அ.தி.மு.க, 2004 - எஸ். ரகுபதி - திமுக
மக்களவை புதுக்கோட்டை தொகுதியில் கடைசி தேர்தல் முடிவில்
ரகுபதி - திமுக = 466,133
இரவிச்சந்திரன் - அதிமுக = 309,637
வெற்றி வித்தியாசம் = 156, 496
தி.மு.க ரகுபதி இந்திய அரசில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக இருந்தார்.
தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி. 2004 வரை கொளத்தூர் (தனி), அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளை இணைத்து புதுக்கோட்டை தொகுதியாக இருந்த்து. திருமயம் சிவகங்கை தொகுதியில் இருந்தது. சீரமைப்பு என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி எடுக்கப்பட்டு கந்தர்வகோட்டை தொகுதி உருவாக்கப்பட்டது. அதன் பிறகு புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிகள் திருச்சி பாராளுமன்றத் தொகுதியிலும், விராலிமலை கரூர் தொகுதியிலும், திருமயம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிகள் சிவகங்கை தொகுதியிலும், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ராமநாதபுரம் தொகுதியிலும் பிய்த்துப் போட்டுவிட்டார்கள்.
தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் புதுக்கோட்டையை காணாமல் செய்தவர்களை கண்டித்தும், மீண்டும் தொகுதி வேண்டும் என்றும் தன்னார்வலர்களும், அரசியல் கட்சிகளும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள் ஆனால் ஆட்சியாளர்களும், தேர்தல் ஆணையமும் போராட்டக் குரல்களை மதிக்கவில்லை. அதனால் மக்கள் எடுத்த முடிவு நோட்டா.. தொடர்ந்து நமது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதால் நமது எதிர்ப்பை காட்ட வேறு வழியில்லை அதனால் 49 ஓ. நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளை செலுத்துங்கள் என்ற பிரச்சாரங்கள் சூடுபிடித்தது. ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பு மறுபக்கம் நோட்டாவுக்கு வாக்கு சேகரிப்ப நடந்தது.
நோட்டாவுக்கே என் வாக்கு என்ற அடிப்படையில் 2009 ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13680 பேர் நோட்டாவுக்கு தங்கள் வாக்குகளை பதிவு செய்து எதிர்ப்பை காட்டினார்கள். அதன் பிறகு 2014 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேலும் நோட்டாவுக்கான பிரச்சாரம் சூடுபிடித்தது.
அதன் பலனாக திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு (புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிகள்) 22848 வாக்குகளும், கரூர் தொகுதிக்கு ( விராலிமலை ) 13763 வாக்குகளும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு ( ஆலங்குடி, திருமயம் ) 8042 வாக்குகளும், ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதிக்கு ( அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி) 6279 வாக்குகளும் என்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 50932 வாக்குகள் தொகுதி வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தொகுதி பறிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டாவுக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது இல்லாமல் பல ஆயிரம் பேர் தங்கள் எதிர்ப்பை காட்ட வாக்கு சாவடிக்கு செல்லவில்லை. இத்தனை எதிர்ப்புகளை காட்டியும் கூட தொகுதியை மீட்கமுடியவில்லை என்ற விரக்த்தி புதுக்கோட்டை மாவட்ட மக்களிடம் அதிகமாக உள்ளது. அதனால் இந்த 17 வது மக்களவை தேர்தலிலும் நோட்டாவுக்கு வாக்கு சேகரிப்போம் கடந்த தேர்தல்களை விட அதிகமான வாக்குகளை நோட்டாவில் பதிவு செய்து எதிர்ப்பை தெரிவிப்போம் என்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் தொகுதி மீட்புக்குழுவினரும் புறப்பட்டுள்ளனர்.