டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், ‘சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தன்னை தானே பொதுச்செயலாளர் எனப் பதில் மனுவில் குறிப்பிட்டதை தவறு என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி இணை ஒருங்கிணைப்பாளர் என ஒப்புக் கொண்டுள்ளார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கட்சி சம்பந்தமான முடிவுகளை தேர்தல் ஆணையம் அதன் கோப்புகளில் மாத்திரமே எடுத்துக் கொண்டுள்ளது.
இறுதி வழக்கினுடைய அடிப்படையில் தான் ஏற்றுக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஜெயதேவ் லஹரி ஆணையாக பிறப்பித்திருந்தார். மேலும், தான் தொடுத்த வழக்கில் நிலுவையில் உள்ள மனுக்களைப் பெற்று பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒதுக்கி இருந்தாலும் அது நிரந்தரமானது அல்ல, தேர்தல் முடிவுகளை பொருத்து அமையும். எடப்பாடி பழனிசாமி அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளது சட்டத்திற்கு புறம்பான ஒன்று. வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாது. அவரை அவரே பொதுச் செயலாளர் எனக் கூறி செயல்பட்டு வருகிறார். இதற்கு தேர்தல் ஆணையத்தின் உடைய எந்த அனுமதியும் இல்லை.
பொதுச்செயலாளர் எனக் கூறுவதன் மூலம் கட்சியை தன் வசப்படுத்தி அதன் மூலம் பலன்களை அனுபவித்து வருகிறார். தொண்டர்களையும், பொது மக்களையும், ஊடகத்தையும் ஏமாற்றி வருகிறார். உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறிப்பாக பிரதான சிவில் வழக்கு ஆகியவைகளுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ஆகவே எடப்பாடி பழனிசாமி அவசர செயற்குழு மூலம் எடுத்த முடிவுகளைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. பொதுச்செயலாளர் எனத் தவறாக அவர் பயன்படுத்தி வருவதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், எடப்பாடி பழனிசாமி படத்தை அவரே போட்டுக் கொண்டு புதிய உறுப்பினர் படிவங்கள் மூலம் உறுப்பினர்களைச் சேர்ப்பதும், புதுப்பித்து வருவதும் செல்லத்தக்கது அல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார்.