அரியலூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக உள்ளவர் தாமரை ராஜேந்திரன். இவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தன்னையும் காத்துக்கொண்டு தன்னை நம்பியிருந்த கட்சிக்காரர்களையும் வளப்படுத்தியிருக்கிறார். தொகுதியில் சாலைகள், பாலங்கள் அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி என பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அதே நேரத்தில் அவரது தொகுதியில் உள்ள சிமெண்ட் ஆலைகள் மூலம் ஏற்படும் இடையூறுகளால் மக்கள் பாதிப்படைவதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டு இருக்கிறது. குறிப்பாக அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்காமல் போராடுகிறார்கள். அதைப் பற்றி இவர் கண்டு கொள்ளவில்லை என்ற வருத்தமும் கோபமும் தொகுதி மக்களிடம் இருக்கிறது.
இவரை எதிர்த்து போட்டியிடுபவர் திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளரான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர் பிரபல வழக்கறிஞர் சின்னப்பா. தொகுதி மக்களிடம் நல்ல அறிமுகமும் நல்ல பெயரும் உண்டு. 1991ல் இவர் திமுக வேட்பாளராக போட்டியிட்டு ராஜீவ் காந்தி இறந்த அலையில் தோல்வியை கண்டவர். அதன்பிறகு மதிமுக சார்பில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி கண்டவர். மதிமுக தலைவர் வைகோவின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர். அதனால் ஆறு தொகுதிகள் பெற்ற வைகோ அதில் ஒன்றை சின்னப்பாவிற்கு கொடுத்துள்ளார். இவரது வெற்றிக்கு திமுக எல்லா விதத்திலும் உதவி செய்யும் என்று ஸ்டாலின் உறுதி அளித்துள்ளாராம்.
தினகரன் கட்சி சார்பில் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. துரை மணிவேல், மக்கள் நீதி மய்யம் ஐ.ஜே.கே. கூட்டணி கட்சி வேட்பாளராக கமல் பாஸ்கர், சீமான் கட்சி சார்பாக திருமானூர் பகுதியைச் சேர்ந்த சுகுணா குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில் அதிமுக தாமரை ராஜேந்திரன் மதிமுக வழக்கறிஞர் சின்னப்பா ஆகிய இருவருக்கும் கடும் நெருக்கடியை உருவாக்குவார்களாக மற்ற கட்சியினர் இருக்கின்றனர். காரணம், தினகரன் கட்சி துரை மணிவேல் ஐ.ஜே.கே. கட்சி கமல் பாஸ்கர் என அனைவருமே உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொகுதியில் வன்னியர்கள், சிறுபான்மையர் வாக்காளர்கள் பெருமளவு உள்ளனர். அதற்கடுத்து உடையார்கள் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் உள்ளனர். இதில் அதிமுக, மதிமுக, ஐஜேகே, தினகரன் கட்சி ஆகிய ஐந்து வேட்பாளர்களும் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இருந்தும் அரசு கொறடா ராஜேந்திரனுக்கும் மதிமுக சின்னப்பாவுக்கும் கடும் போட்டி இருக்கிறது. திமுக காங்கிரஸ் விசிக ஆகிய கட்சி தொண்டர்கள் பொறுப்பாளர்கள் ஆதரவோடு சின்னப்பா வெற்றிக் கோட்டை தொடுவதற்கு கடும் முயற்சி செய்து வருகிறார்.