கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், " கர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக ஊழலில் திளைக்கிறது. கர்நாடகாவில் 1.5 லட்சம் கோடி ரூபாய் பாஜக கொள்ளை அடித்துள்ளது. இந்த பணத்தை வைத்து மாநிலத்தில் எவ்வளவோ வளர்ச்சி பணிகளை செய்திருக்கலாம். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளில் பாஜக அரசு 40 சதவீதம் கமிஷன் வைத்து மக்கள் பணத்தை கொள்ளை அடித்து உள்ளது. இதற்காக பாஜகவினர் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை.
அரசு ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து அரசு ஒப்பந்ததாரர் சங்கத்தினர் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். ஆனால் மோடியோ இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் பாஜகவினர் என்று அறிந்த பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக எம்எல்ஏ மகனிடம் 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அது குறித்து உரிய விசாரணை நடத்தாமல் பாஜகவினர் எம்எல்ஏவுக்கு ஆதரவாக அணிவகுப்பு நடத்துகின்றனர். காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக மாநில பால் உற்பத்தி கூட்டுறவு நிறுவனமான நந்தினி பால் நிறுவனம் மற்றும் பால் கூட்டமைப்பு வலுப்படுத்தப்படும். இதர மாநில கூட்டுறவு பால் தயாரிப்பு மற்றும் உற்பத்தி பொருட்களை கர்நாடகாவில் அனுமதிக்க மாட்டோம்" என்று பேசினார்.