அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றைப் பதிவு செய்யப்பட்ட கருவிகள் வைத்துப் பாடக்கூடாது எனவும் அதற்கென பயிற்சி பெற்றோரை வைத்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பாட ஏற்பாடு செய்ய வேண்டும் என 2021 டிசம்பரில் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் ஜனவரி 30 ஆம் தேதி நடந்த மாமன்ற கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து மேயர் பிரியாவும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மேயர் பிரியாவின் தலைமையில் நடந்த மாமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுத் தொடங்கப்பட்டது. நூற்றாண்டு கடந்த ரிப்பன் மாளிகையில் நடக்கும் சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் முதல் முறையாக இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பின்னர், மறைந்த 122 ஆவது வார்டு உறுப்பினர் ஷீபா வாசுவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் மார்ச் இரண்டாம் தேதி கூட்டம் நடைபெறும் என மேயர் பிரியா அறிவித்தார். நிறைவுக் கூட்டத்தில் தேசிய கீதமும் முதன்முறையாகப் பாடப்பட்டது.